Published : 14 Mar 2017 03:54 PM
Last Updated : 14 Mar 2017 03:54 PM

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு மூலம் மாணவர் சேர்க்கை: அன்புமணி வரவேற்பு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணை வரவேற்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''2017-18ஆம் ஆண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர முறையில் மாநில அரசுகளே நடத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழலை தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் கட்டணக் கொள்ளையையும் தடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகள் கடந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டன. இந்தத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இந்த விதி முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தன.

உதாரணமாக சென்னையில் உள்ள தனியார் நிகர்நிலைப்பல்கலைக்கழகம் ஒன்றில் மொத்தம் உள்ள 120 இடங்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் தரவரிசைப்படி முதல் 120 இடங்களைப் பிடித்தவர்களுக்குத் தான் சேர்க்கை இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ. 60 லட்சம் வரை லஞ்சம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தான் இடம் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

120-ஆவது இடத்தில் சேர்க்கப்பட்டவர் அப்பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 919 ஆவது இடத்தில் இருந்தவர் ஆவார். அவருக்கு முன்பு இருந்த 800 பேருக்கு பணம் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இத்தகைய ஊழலுக்கு காரணம் நிகர்நிலைப் பல்கலை இடங்களை நிரப்ப அவற்றுக்கு அதிகாரம் தரப்பட்டது தான்.

அதனால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் ஆகியவற்றை மாநில அரசுகளின் மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தியது. இதுதொடர்பாக மக்களவையில் பலமுறை வலியுறுத்தினேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு பலமுறை கடிதம் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இப்போது தனியார் மருத்துவக் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர முறையில் நடத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று நம்பலாம். மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகளை தடுப்பதற்கான துணிச்சலான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் இதுகுறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைப்படுத்தப்படும் அதே நேரத்தில் மருத்துவக் கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலையளிக்கிறது. கல்விக்கட்டணங்கள் முறைப்படுத்தப்படாததால், ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் நியாயமான அளவை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உதாரணமாக சென்னை புறநகரில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2015-16 ஆம் ஆண்டு வரை மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சமாக இருந்தக் கல்விக் கட்டணம் கடந்த ஆண்டில் ரூ.21 லட்சமாக உயர்த்தப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணம் ரூ,11 ஆயிரம் மட்டும் தான். ஆனால், இந்தக் கட்டணத்தையே செலுத்த முடியாமல் பல மாணவர்கள் தவிக்கும் நிலை தான் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு ரூ.21 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் தகுதியுடைய மாணவர்களால் கூட தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இயலாது என்பது தான் உண்மை.

இதைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் மருத்துவப்படிப்புக்கான கட்டணத்தை அந்தந்த மாநில அரசே நிர்ணயிக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பு வழங்க எவ்வளவு செலவாகிறது என்பதை பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு மூலம் ஆய்வு செய்து கணக்கிட்டு, அத்துடன் சிறிது லாபம் சேர்த்து மருத்துவக் கல்விக் கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும். இதன்மூலம் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை தடுக்க முடியும்.

இதற்கெல்லாம் மேலாக, மருத்துவப் படிப்பில் சமூக நீதியை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் நடத்துவதால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது தடுக்கப்பட்டு விடும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் தகுதி அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதால் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதற்கு வசதியாக நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x