

சென்ைனயில் ஆதார் முகாம்கள் முடிய டிசம்பர் 31-ம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்த கெடு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னைவாசிகள் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆதார் முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடங்களில் ஆள் பற்றாக்குறையாலும் கணினி பற்றாக்குறையாலும் பணிகள் தாமதமாகி வருகின்றன. பலர் முகாமுக்கு வந்தும் புகைப்படம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
நங்கநல்லூரில் வசிக்கும் பாலாஜி கூறுகையில், “அலுவலகத்துக்கு லீவ் போட்டு ஆதார் முகாமுக்கு சென்றேன். அங்கு கூட்டம் அதிகமாக உள்ளதால் எல்லோருக்கும் புகைப்படம் எடுக்க முடியாது என்று கூறுகின்றனர்” என்றார்.
தாங்கள் முன்பு வசித்த இடத்தில் நடக்கும் ஆதார் முகாமில்தான் புகைப்படம் எடுக்க முடியும். அப்படிச் செல்லும் போது அங்கு கணினி செயல்படாததால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். நுங்கம்பாக்கத்திலிருந்து அடையாறுக்கு இடம் மாறியிருக்கும் கண்ணன் கூறுகையில், “ஒரு நாளுக்கு 30 பேருக்குதான் புகைப்படம் எடுக்கப்படும் என்கின்றனர். நான் அடையாறிலிருந்து வந்திருக்கிறேன். இன்னும் எத்தனை முறை வர வேண்டும் என்று தெரியவில்லை” என்றார்.
மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) 2010-ல் பதிவு செய்யப்படாதவர்கள் புதிதாக பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் மண்டல அலுவலகங்களில் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த படிவங்கள் பல இடங்களில் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக முதியோர்கள் அவதிப்படுகின்றனர். மாம்பலத்தில் வசிக்கும் 72 வயதான ஜெகந்நாதன் கூறுகையில், “கோடம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் என்.பி.ஆர். படிவங்கள் இல்லை என்று கூறுகின்றனர். வேறு எங்கு சென்று வாங்க வேண்டும் என்று தெரியவில்லை” என்றார்.
இது குறித்து அதிகாரி கூறியதாவது:
முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்களை பத்திரிகைகளின் வாயிலாக தெரிவித்து வருகிறோம். அது தவிர ஆதார் அட்டைக்கான விண்ணப்பங்களை கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக விநியோகித்து வருகின்றனர். 70% மக்கள் ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் வரை முகாம்கள் நடைபெறும் என்றார்.