

சென்னையில் தொடர் மழை காரணமாகவும், சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் தீபாவளிக்காக சொந்த ஊர் சென்றுவிட்டதாலும் மெட்ரோ ரயில் பணிகள் பாதித்துள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக ரூ.14,600 கோடியில் இரு வழித் தடங்களில் 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது. அன்றுமுதல் சென்னையில் நான்கு நாட்கள் கனமழை பெய்தது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போய்விட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தொடர் மழையாலும், ஏராளமான தொழிலாளர்கள் ஊருக்குச் சென்றதாலும் ஒருவாரம் மெட்ரோ ரயில் பணிகள் பாதித்தன.
சென்னையில் முதல்கட்டமாக வரும் ஜனவரி மாதம் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் ரயில் பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் அந்த வழித்தடத்தில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்கள் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
கோயம்பேடு, சென்னை புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி.), அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய 7 பறக்கும் ரயில் நிலையங்களில் 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன. கோயம்பேடு, சிட்கோ, ஆலந்தூர் ஆகிய 3 பறக்கும் ரயில் நிலையங் களில் மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது. தொடர் மழை காரணமாக இப்பணி ஒருவாரம் நிறுத்தப்பட்டது. இதுபோல இதர பணிகளிலும் தொய்வு ஏற்பட் டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மழைக்காலத்தில் பணிகள் பாதிப்பது இயற்கைதான். தொடர் மழை மட்டுமல்லாமல் தீபாவளிக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊருக்கு போய்விட்டதால்தான் ஒருவாரம் பணிகள் பாதித்தன. இதுகுறித்து அதி காரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
இந்தியன் ரயில்வேயில் கனமழை பெய்தால், அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே தெளிவாகத் தெரிய வேண்டிய சிக்னல், 50 மீட்டர் தூரத்தில் வரும்போதுதான் தெரியும். ஆனால், மெட்ரோ ரயிலைப் பொறுத்தவரை ரயில் என்ஜின் அறைக்குள்ளேயே அதிநவீன தானியங்கி சிக்னல் இருக்கிறது. அதனால் டிரைவர், தண்டவாளத்தில் உள்ள சிக்னலைப் பார்க்காமலேயே மெட்ரோ ரயிலை இயக்க முடியும்.
தீபாவளிக்கு ஊருக்கு போன தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிக் கொண்டிருப்பதால், நாளைமுதல் (அக்.28) மெட்ரோ ரயில் பணிகள் வழக்கம்போல நடைபெறும். தரையில் இருந்து 40 அடி ஆழத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடப்பதால், அதில் எந்தப் பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.