Published : 08 Jun 2016 11:04 AM
Last Updated : 08 Jun 2016 11:04 AM

திருச்சி - ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் 100 ஆண்டுகளைக் கடந்தும் மவுசு குறையாத மாம்பழச் சாலை: சுற்றுலாப் பயணிகளை கவரும் ‘இமாம்பசந்த் ரகம்

ஸ்ரீரங்கம் வரும் சுற்றுலாப் பயணிகள் ரங்கநாதரை தரிசனம் செய்வதுடன், சீசனில் மட்டும் கிடைக்கக் கூடிய ‘இமாம்பசந்த்’ உள்ளிட்ட மாம்பழ வகைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ளது மாம் பழச் சாலை. காவிரிக் கரையில் உள்ள தோட்டங்களில் விளையும் மாம்பழங்களுக்கு எப்போதும் தனிச்சுவை உண்டு. இதில், பிரபல மான தாத்தாச்சாரியர் தோட்டத்து ‘இமாம்பசந்த்’ மாம்பழம் குறிப் பிடத்தக்கது. இது தவிர மல்கோவா, பங்கனப்பள்ளி, நீலம், ருமேனியா, செந்தூரம் உள்ளிட்ட வகைகளும் இங்கு விளைகின்றன.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் மாந்தோப்புகளை உருவாக்கியவர்கள், வாகன வசதி இல்லாத காலத்தில் பழங்களைத் தலைச்சுமையாக மூங்கில் தட்டில் எடுத்து வந்து, ஸ்ரீரங்கத்து சாலைகளில் தரையில் வரிசையாக வைத்து ஏல முறையில் விற்பனை செய்துள்ளனர்.

வைகாசி -ஆடி மாம்பழ சீசன்

ஆண்டுதோறும் வைகாசி மாதம் தொடங்கும் மாம்பழ சீசன் ஆடி மாதம் வரை நீடிக்கிறது. சீசனில் மாம்பழத் தட்டுகளால் நிறைந்து காணப்படும் இப்பகுதியை ஒரு கட்டத்தில் மாம்பழச் சாலை என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். தற்போது, அதுவே பெயராக நிலைத்துவிட்டது. தற்போதும் அங்கு சீசனில் தினமும் மாம்பழ ஏலம் நடக்கிறது.

அதிகாலையில் ஏலம்

தோட்டத்திலிருந்து வாகனங் களில் பழங்களை எடுத்து வரு வோர், முதல் நாள் இரவே மாம் பழச்சாலையில் மூங்கில் தட்டுகளில் ரகம் வாரியாக பழங்களை வரிசையாக அடுக்கி வைக்கின்றனர். அதிகாலை 4 மணி முதல் 5 வரை ஏலம் நடக்கும். போட்டிபோட்டுக் கொண்டு வியாபாரிகள் பழங்களை வாங்கிச் செல்கின்றனர். விடியும் போது வியாபாரம் முடிந்து விடு கிறது. தொடர்ந்து, வழக்கம்போல வாகன நெரிசல் மாம்பழச் சாலையை தொற்றிக் கொள்கிறது. இப்பகுதியில் சிலர் நிரந்தரக் கடைகளும் வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாம்பழத் தோட் டத்துக்காரர் சேகர் கூறும்போது, “எங்கள் பாட்டன் காலத்தில் இருந்தே இந்த மாம்பழச்சந்தை கூடுகிறது. இங்கு ஏலத்துக்கு வரும் மாம்பழங்களில் முதல் ரகம் இமாம் பசந்த், இரண்டாவது மல்கோவா, அடுத்து பங்கனப்பள்ளி.

ரகத்தைப் பொறுத்து ஒரு மூங்கில் தட்டு பழங்கள் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 வரை ஏலம் போகும். ஒரு தட்டில் 50 முதல் 100 பழங்கள் வரை இருக்கும். இமாம்பசந்த் மட்டும் கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விலை போகி றது. இமாம்பசந்த் பழத்துக்கு வர வேற்பு அதிகம் இருப்பதால், பெரும் பாலும் சந்தைக்கு வருவதில்லை. தோட்டத்துக்கே வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றுவிடுவர். மல்கோவா மாம்பழத்துக்கு சேலம் எப்படி பெயர்போனதோ, அதுபோல இமாம்பசந்த் மாம்பழம் என்றாலே ஸ்ரீரங்கம்தான். சீசனில் ரங்கம் கோயிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து மாம்பழம் வாங்க மறப்பதில்லை. இந்த சுவைக்குக் காரணம் காவிரி ஆற்றின் நீரும், களிமண்ணும்தான்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x