Published : 20 Jan 2016 07:53 AM
Last Updated : 20 Jan 2016 07:53 AM

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார்- முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. வெள்ள நிவாரணம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இதில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்று கிறார். அவரது உரையில் புதிய திட்டங்கள், முக்கிய அறிவிப் புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரையாற்றி முடித்ததும் பேரவை ஒத்திவைக்கப்படும். அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமை யில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.

மீண்டும் அவை கூடும்போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மீது விவாதம் நடக்கும். இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசுவர். விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசுவார். அதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படும். இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக சில நாட்களில் அவை மீண்டும் கூடும் என தெரிகிறது.

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், நிவாரணப் பணி, செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு, ஜல்லிக்கட்டு விவகாரம், லோக் ஆயுக்தா, தமிழக மீனவர்கள் பிரச்சினை, மதுவிலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை போன்ற பல்வேறு பிரச்சினைகளை பேர வையில் எழுப்ப எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 26-ம் தேதி குடியரசு தினம் என்பதால், அதற்கு முன்பு பேரவை நிகழ்வு களை முடிக்க வாய்ப்புள்ள தாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது. புதிதாக அமைக்கப்பட்ட 14-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2012 நவம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவையின் வைர விழா என 6 முறை ஏற்கெனவே பேரவையில் ரோசய்யா உரையாற்றியுள்ளார். இப்போது 14-வது சட்டப்பேரவையில் 7-வது முறையாக ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார்.

கருணாநிதி பங்கேற்பா?

திமுக தலைவரும் திருவாரூர் தொகுதி எம்எல்ஏவுமான கருணாநிதி, தனக்கு தேவையான இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்று கூறி சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அவ்வப்போது பேரவை வளாகத்துக்கு வந்து வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டுவிட்டு செல்கிறார். அதேபோல இன்றும் அவர் பேரவை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வருவார் என கூறப்படுகிறது. அப்போது, பேரவைக்குள் வருவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

தேமுதிக எம்எல்ஏக்கள்

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது, அவைக்காவலர்களை தாக்கியதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். மோகன்ராஜ், கொறடா வி.சி.சந்திரகுமார், கே.தினகர், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய 6 தேமுதிக எம்எல்ஏக்கள் அடுத்த கூட்டத் தொடர் தொடங்கி 10 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி, இந்த 6 பேரும் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது. ஆனால், விஜயகாந்த் உள்ளிட்ட மற்ற 13 தேமுதிக எம்எல்ஏக்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x