Published : 07 Oct 2013 04:03 PM
Last Updated : 07 Oct 2013 04:03 PM

மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

இலங்கையில் பறிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளைத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதிய கடிதத்தின் நகலை, மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கனிமொழி எம்.பி. நேரில் வழங்கினார்.

அந்தக் கடிதத்தில், அதிகாரப்பூர்வ புள்ளி விவரப்படி கடந்த 1983-ம் ஆண்டுக்கு பிறகு 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். இதில் 1991 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 118 மீனவர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் 480 தடவை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கிய இந்த துப்பாக்கி சூட்டின் சத்தம் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மீனவர்கள் மீது கொடும் காயம் ஏற்படுத்துவது அவர்களின் உயிர்களை பறிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்றவற்றை இலங்கை கடற்படை மனிதாபிமானமற்ற, சட்டபூர்வமற்ற முறையில் செய்து வருவது சட்டத்துக்கு மாறானது.

இதுபோன்ற காட்டு மிராண்டிதனமான செயல்களை சர்வதேச சமுதாயம் மிக கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் இக்கொடுஞ்செயலை இந்திய அரசு தடுத்து நிறுத்தவில்லை.

இது குறித்து கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் வழக்கம் போன்று மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார். அக்கடிதத்தில் இலங்கை சிறையில் வாடும் 136 மீனவர்களையும், 29 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் பாம்பனை சேர்ந்த 60 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்களின் மீன்பிடி படகுகள் இன்றி மனவேதனையுடன் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் அவர்களது படகுகளுடன் இலங்கை போலீசாரால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர். மீனவர்களின் வாழ்வா தாரமே அவர்களின் படகுகள்தான். மீனவர்களை விடுதலை செய்யும் அதே நேரத்தில் அவர்களின் படகுகளை வழங்காதது மனிதாபிமானம் அற்றது. அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

எனவே, இது போன்ற கொடுமையான நடவடிக்கைகளை தடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தூதரகம் மூலம் அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தும், இவர்களின் படகுகளை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு செல்லும் நமது வெளியுறவு மந்திரி இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இலங்கை கடற்படையின் கொடூர நடவடிக்கையை உணர செய்யும்படி எடுத்துரைக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x