

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரத்தைக் கொண்டு தமிழகம் மற்றும் கர்நாடா மாநிலங்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்க கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தேமுதிக சார்பில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், 1000 பேருக்கு குர்பானி வழங்கிய கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசும்போது, "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவுக்கு எனது நன்றி.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளை பார்த்து சிரித்த ஜெயலலிதாவை பார்த்து உலகமே தற்போது சிரிக்கிறது.
ஆளுநர் மாளிகையில் அம்மா, அம்மா என அழுதுகொண்டே மீண்டும் பதவியேற்கும் அவசியம் என்ன?
நீதிபதி குன்ஹாவின் உருவப் படத்தை அதிமுகவினர் அவதூறாக சித்தரித்து வருகின்றனர். இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி நதி நீர் மற்றும் முல்லைபெரியாறு விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விழா எடுத்துக் கொண்டாடிய அதிமுகவினர், பெங்களூரு தீர்ப்பை மட்டும் ஏற்காதது ஏன்? 18 வருடங்களாக இந்த வழக்கை இழுத்தடித்து ஏன்? நீங்கள் நிரபராதி என்றால், வழக்கை விரைவில் முடித்திருக்கலாமே. சாதகமாக தீர்ப்பு வந்தால் மதிப்பதும், பாதகமாக வந்தால் எதிர்ப்பது தான் நியாயமா?
இந்த விவகாரத்தை கொண்டு தமிழகம் மற்றும் கர்நாடா மாநிலங்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்க கூடாது. காவிரியை எடுத்துக் கொள், அம்மாவை திரும்பி கொடு என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. காவிரி தீர்ப்பு என்பது தமிழக மக்களுக்கு சொந்தமானது. இதற்காக தமிழக மக்கள் செய்த தியாகங்கள் அதிகம்.
தமிழகத்தில் சாதாரண பிரச்சினைகளுக்கெல்லாம் 144 தடை உத்தரவு போடப்பட்டது. தற்போது, தமிழகத்தில் வன்முறை நடந்து வருகிறது. இப்போது ஏன் 144 தடை உத்தரவு போடவில்லை. ஆங்காங்கே அதிமுகவினர் உருவ பொம்மையை எரிப்பதை போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்" என்றார் விஜயகாந்த்.