

அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேரம் நடந்தது தொடர்பாக உயர் நீதிமன்றம் தலையிட்டு உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலை பேசப்பட்டதாகவும், பலகோடி ரூபாய் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டிருப்பதாகவும், மூன் தொலைக்காட்சி மற்றும் டைம்ஸ் நவ் ஆங்கிலத் தொலைக்காட்சி ஆகியவை இணைந்து காணொலிகளுடன் கூடிய செய்திகளை வெளியிட்டுள்ளன.
நேற்றைய தினம் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் முன்னணி தொலைக்காட்சிகளில் இச்செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகியுள்ளது. இது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடைபெற்ற திரைமறைவு ரகசியங்களை புலனாய்வு யுக்திகளைப் பயன்படுத்தி வெளிக்கொண்டு வந்துள்ள தமிழ் தொலைக்காட்சியான மூன் தொலைக்காட்சி மற்றும் அதன் ஆசிரியர் ஷாநவாஸ் கான் பாராட்டிற்குரியவர்கள். இந்த புலனாய்வு நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நியாயம் தான் என்பதை எடுத்துரைக்கும் வகையில் மூன் தொலைக்காட்சியின் புலனாய்வு அந்தரங்க காணொலிகள் அமைந்துள்ளன.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் குதிரை பேரம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உண்மைகள் முழுமையாக மக்கள் மன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக திமுக தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தையும் கவனத்தில் கொண்டு தனது கண்காணிப்பில் ஒரு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் விசாரணைக்குழு குறுகிய காலத்தில் காணொலியில் தெரிவிக்கப்பட்டவை உண்மைதானா என்பதை பகுப்பாய்வு செய்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.