

ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி நடந்த கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் சத்தியமங்கலம் கல்லூரி மாணவி கு.ஸ்வர்ணலட்சுமி முதல் பரிசு பெற்றார்.
ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடக்கிறது. புத்தகத் திருவிழாவின் ஒரு அங்கமாக மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், மாநில அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஈரோட்டில் நடந்தது. இதில், 31 மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் 400 பேர் பங் கேற்றனர்.
பேச்சுப் போட்டியை மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தொடங்கி வைத்தார். மொத்தம் 20 நடுவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். ‘பொறுப்புகளையேற்றுப் பொதுப்பணியாற்று’ என்ற தலைப்பில் நடந்த முதல் சுற்றுப் போட்டி நடந்தது. இதில் 21 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக் குத் தேர்வு செய்யப்பட்டனர்.
‘மாற்றம் என்பது மானுடப் பிறவி’ என்ற தலைப்பில் நடந்த இறுதிச்சுற்று பேச்சுப் போட்டியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி கு.ஸ்வர்ணலட்சுமி முதல் பரிசையும், புதுக்கோட்டை பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ம.கவுசல்யா இரண்டாம் பரிசையும், கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மாணவி உ.மதுமதி மூன்றாம் பரிசையும் வென்றனர்.
இவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இத்துடன் ஆகஸ்ட் 8-ம் தேதி புத்தகத் திருவிழா மேடையில் பேசுவதற்கு இம்மூவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.