

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கோபுரங்களில் அடைந்துள்ள குரங்குகள் மற்றும் பறவையினங்களுக்காக தினமும் தானியங்கள், உணவு வகைகள் கோயிலில் தூவப்படுகின்றன. இப்பணிக்கு லண்டன் வாழ் தமிழர் ஒருவர் உதவி செய்து வருகிறார்.
மன்னார்குடியை அடுத்துள்ள பரவாக்கோட்டையைச் சேர்ந்தவர் வீரா. தற்போது லண்டனில் வசித்து வருகிறார். மூன்று மாதத்துக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வரும் இவர், காலை வேளைகளில் மன்னார்குடி பெரிய கோயிலில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கோயிலுக்கு வந்தபோது, குரங்குகள் எதுவும் அங்கு வரவில்லை.
இதனால் மனம் வருந்திய வீரா, காலை 9 மணியாகியும் குரங்குகள் வரவில்லையே ஏன் எனக் கோயில் காவலர்களிடம் கேட்டார். வெயில் அதிகரித்து வருவதால் மாலை நேரங்களில் மட்டுமே குரங்குகள் வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் புறா,கிளி உள்ளிட்ட பறவைகளும் வெயிலால் இரை தேடச் செல்லாமல் அடைந்து கிடப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இதை கேட்ட வீரா, இதற்கான மாற்று ஏற்பாடு குறித்து யோசித்தார். அதன்படி, அரிசி, திணை, கம்பு, அவற்றை இடுவதற்கான வாளிகள், தண்ணீர் குடிப்பதற்கென பெரிய அலுமினிய பாத்திரங்கள் ஆகியவற்றை வாங்கி வந்தார். கோயில் உட்பிரகாரத்தில் பறவைகள் கூடும் மதில்சுவரின் அருகே தானியங்களைத் தூவினார். அலுமினியப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்தார்.
அந்த பொருட்களை கோயில் பணியாளர்களிடம் ஒப்படைத்து, இந்தச் செயலை தினமும் செய்யுங்கள். இந்த தானியம் முடிந்தவுடன் என்னிடம் கேளுங்கள், வாங்கித் தருகிறேன். மற்ற பக்தர்கள் வாங்கிக் கொடுத்தாலும் பயன்படுத்துங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இதையடுத்து, கோயில் பணியாளர்கள் தினமும் காலையில் முதல் பணியாக பறவைகளுக்கும், குரங்குகளுக்கும் உணவு, தண்ணீர் வசதி செய்துதரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, லண்டனில் இருந்த வீராவிடம் கேட்டபோது அவர் கூறியது:
லண்டனில் எனது ஓய்வு நேரங்களில் பறவைகள், உயிரினங்களின் பசியைப் போக்கும் பணியை பறவைகள் கூடும் பூங்காக்களுக்குச் சென்று செய்து வருகிறேன். அந்த வகையில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலிலும் உயிரினங்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன.
வெயிலின் தாக்கத்தால் பறவைகளும் உயிரினங்களும் இரைதேடக்கூட செல்ல முடியாமல் பாதித்திருப்பதை மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வாழும் பறவைகள், குரங்குகள் எனக்கு உணர்த்தின.
அந்த ஜீவராசிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடவுளுக்கு மட்டும் அல்ல, கடவுளை வணங்கச் செல்லும் பக்தர்களுக்கும் உண்டு என்றார்.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள புறாக்கள் உள்ளிட்ட பறவைகளுக்காக உணவு தானியங்களை தரையில் வீசும் கோயில் பணியாளர்கள். (உள்படம்) உணவு தானியங்களை உண்ணும் புறாக்கள்.