

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை இன்று (திங்கள்கிழமை) அர்ஜீன் சம்பத் நேரில் சந்தித்தார். அவருடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத், "நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார்.
அரசியலுக்கு வருவது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார். இது அவர் அரசியலுக்கு வரவேண்டிய தருணம். அவரை பாஜக இயக்கவில்லை" என்றார்.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரஜினிகாந்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பரவலாக பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில் அவரை கட்சித் தலைவர்களும், சங்க நிர்வாகிகளும் சந்திப்பது மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.