

அரசு பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதற்கான கையடக்க கருவிகள் பழுதடைந்ததாலும், தேவைக்கேற்ப புதிய கருவிகள் வாங்கப்படாததாலும், துளையிட்டுக் கொடுக்கும் பழைய பயணச்சீட்டுகளே மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளன.
அரசு பேருந்துகளில் கையடக்க கருவிகள் மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முறை சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, மாநகரப் போக்கு வரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிறகு, இது அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
நடத்துநர்கள் இக்கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்கும் போது, ஒவ்வொரு பேருந்திலும் வழங்கப்பட்டுள்ள பயணச்சீட்டு கள், வசூல் தொகை குறித்த விவரங்களைப் பணிமனை கள், மண்டல அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள் உடனடி யாக தெரிந்துகொள்ள இயலும். தவிர, பேருந்தில் உள்ள பயணி களின் எண்ணிக்கை, அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் தூரம், பேருந்துகள் இருக்கும் இடம், பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா என்ற விவரம் ஆகியவற்றையும் போக்கு வரத்துக் கழக உயர் அதிகாரிகள் உடனடியாக ஆன்லைனில் அறிந்துகொள்ள முடியும்.
இது மட்டுமின்றி, அனைத்து விவரங்களும் எலெக்ட்ரானிக் வடிவில் உடனுக்குடன் பதி வாகிவிடுவதால், பயணச்சீட்டுகள் எண்ணிக்கை, வசூல் தொகை போன்றவற்றில் கீழ்நிலை முதல் மேல்நிலை வரை முறைகேடுகள் செய்வதற்கான வாய்ப்பும் தவிர்க்கப்படும்.
இந்தத் திட்டம் நடத்துநர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், போதிய அளவில் புதிய கருவிகள் வாங்காதது, பழுதடைந்த கருவிகளை சரி செய்யாதது போன்ற காரணங் களால் இத்திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயணச்சீட்டை துளையிட்டு வழங்கும் பழைய நடைமுறையே மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து நடத்துநர்கள் கூறியபோது, ‘‘சில ஆண்டு களுக்கு முன்பு வழங்கப்பட்ட பயணச்சீட்டு கருவிகளில் சுமார் 80 சதவீதம் பழுதாகிவிட்டன. சரிசெய்து தருமாறு போக்கு வரத்துக் கோட்டங்களில் அவற்றைக் கொடுத்துள்ளோம். ஆனால், அவற்றை சரிசெய்யா மல், கிடப்பில் போட்டுவிட்டனர். தேவைக்கு ஏற்ப புதிய கருவி களும் வாங்கப்படவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளால், பயணச்சீட்டை துளையிட்டுக் கொடுக்கும் முறையையே பின்பற்றத் தொடங்கிவிட்டோம்’’ என்றனர்.