Published : 27 Aug 2016 10:35 AM
Last Updated : 27 Aug 2016 10:35 AM

முல்லை பெரியாறு அணையில் மத்திய துணைக் குழு ஆய்வு: 2 மணி நேரம் நடைபெற்றது

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம், நீர்க்கசிவு, நீர் வெளி யேற்றம் தொடர்பாக மத்திய துணைக் குழுவினர் சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.

முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூவர் குழு புதிய தலைவராக பி.ஆர்.கே.பிள்ளை நியமிக்கப்பட் டுள்ளார். இக்குழுவுக்கு உதவியாக தமிழக, கேரள பிரதிநிதிகள் அடங்கிய மத்திய துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பரிஷ் கரீஷ் கிரீஷ் உள்ளார்.

இந்நிலையில், துணைக் குழு தலைவர் அம்பரிஷ் கரீஷ் கிரீஷ் தமிழக பிரதிநிதிகளான மாதவன், சாம்இர்வீன் ஆகியோருடன் தமிழக படகில் நேற்று காலை 10.30 மணிக்கு தேக்கடி படகுத்துறை வழியாக பெரியாறு அணைக்குச் சென்றனர். கேரள பிரதிநிதிகளான ஜார்ஜ்டேனியல், பிரசித் ஆகியோர் ஜீப்பில் வல்லக்கடவு வழியாக 11.30 மணிக்கு வந்து சேர்ந்தனர்.

பின்னர் பெரியாறு அணையின் நீர்மட்டம், நீர் வெளியேற்றம், நீர்க் கசிவு தொடர்பாக அவர்கள் சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடத்தினர். பின்னர் மாலை 3.30 மணிக்கு குமுளியில் ஆய்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக, கேரள பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “வல்லக்கடவு வழியாக தொழிலாளர்கள் கட்டு மானப் பொருட்களை கொண்டு செல்ல கேரள வனத்துறை மற்றும் அம்மாநில நீர்பாசனத் துறையினர் தடை விதிக்கக் கூடாது. அணைப் பகுதியில் மின் வசதி மேற்கொள்ள கேரள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக பிரதிநிதிகள் முறையிட்டனர். இப்பிரச்சினை தொடர்பாக மூவர் குழு தலைவரிடம் அறிக்கை அளிக்கப்படும் என துணைக் குழு தலைவர் பதில் அளித்தார்.

துணைக் குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற இருப்பதாகவும் அம்பரிஷ் கரீஷ் கிரீஷ் தெரிவித்துள்ளார். இரு மாநில பிரதிநிதிகள் ஆய்வுக் கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x