டாஸ்மாக் பார் உரிமையாளரை சரமாரியாக வெட்டி வீட்டில் இருந்த 150 பவுன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை: திருவான்மியூரில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

டாஸ்மாக் பார் உரிமையாளரை சரமாரியாக வெட்டி வீட்டில் இருந்த 150 பவுன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை: திருவான்மியூரில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
Updated on
1 min read

சென்னை திருவான்மியூரில் டாஸ்மாக் பார் உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு வீட்டில் இருந்த 150 பவுன் நகை, ரூ.15 லட்சம் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை யடித்து சென்றனர்.

திருவான்மியூர் கலாக்ஷேத்ரா காலனி எம்ஜி ராமச்சந்திரன் சாலையை சேர்ந்தவர் மதியரசன் (55). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், சென்னையில் 4 இடங்களில் டாஸ்மாக் பார்களை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வி. மகள் திருமங்கை தனியார் பள்ளியில் ஆசிரிய ராக இருக்கிறார். மகன் ராதா கிருஷ்ணன் (15) தனியார் பள்ளி யில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் செல்வியின் தம்பி சரவணனும், அவரது மனைவியும் வசித்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு, மதியரசன் எழுந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது முகமூடி அணிந்த 7 பேர் கைகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து சத்தம் போட்ட மதியரசனை தலை, கை, முகம் என பல்வேறு இடங்களில் அவர்கள் கத்தியால் சரமாரியாக தாக்கினர். தூங்கிக் கொண்டிருந்த மற்றவர்கள் சத்தம் கேட்டு எழுந்து ஓடி வந்தனர். சத்தம் போட்டால் அனைவரையும் குத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய கொள்ளையர்கள், அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு பீரோ சாவியையும் பறித்தனர். அனைவரின் கை, கால்களை கட்டி ஓர் அறையில் அடைத்தனர். அதன்பின் பீரோவை திறந்து நகைகள் மற்றும் லட்சக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் உயர் அதிகாரிகளும் திருவான்மியூர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். 150 முதல் 200 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக குடும்பத்தினர் கொடுத்த புகாரின்படி திருவான்மியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த தெருவில் உள்ள குடியிருப்புகளில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா என்று போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் வெட்டியதில் பலத்த காய மடைந்த மதியரசன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in