Last Updated : 11 Feb, 2017 12:09 PM

 

Published : 11 Feb 2017 12:09 PM
Last Updated : 11 Feb 2017 12:09 PM

பிப்.11-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும், சட்டம் - ஒழுங்கு நிலை குறித்தும் மத்திய அரசிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 3 பக்க அறிக்கை தாக்கல் செய்ததாக நேற்றிரவு தகவல் வெளியானது. தொலைக்காட்சி செய்தி சேனல்களில் இதுதொடர்பாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை அந்தச் செய்தியை மறுத்துவிட்டதால், அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

பிப்ரவரி 7-ம் தேதி இரவு முதல் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் இன்று 5-வது நாளாகவும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றின் தொகுப்பு: ( அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க)

8.45 pm: பிளவு படுத்தவே காலதாமதம்: எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்த பிறகு சசிகலா பேட்டி

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து விட்டு போயஸ் தோட்டம் திரும்பிய வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஆளுநர் கால தாமதம் செய்வது அதிமுகவை பிளவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

எம்.எல்.ஏ.க்களை சந்தித்த பிறகு அதிமுக குடும்ப உறுப்பினர்களை சந்தித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மன உறுதியுடன் இருக்கிறார்கள்.

ஆளுநர் முடிவுக்காக இன்று வரை காத்திருந்தோம், நாளை முதல் எங்கள் போராட்டம் வேறு விதத்தில் இருக்கும், என்றார்.

அப்போது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா: ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார்.


7.30 pm: முதல்வர் ஓபிஎஸ்-க்கு மேலும் ஒரு எம்.பி. ஆதரவு: திருப்பூர் எம்.பி., சத்தியபாமா ஆதரவு தெரிவித்தார். முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்கும் 4-வது எம்.பி. சத்தியபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியபாமா கூறியதாவது: “முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதிமுக-வில் பதவி தரப்படுகிறது. மக்கள் ஜெயலலிதாவுக்குத்தான் ஆதரவு அளித்தனர்.

ஜெயலலிதாவுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. யாரும் வரவும் முடியாது. ஜெயலலிதாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் சசிகலா நிறைவேற்றவில்லை.

ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமையும்” என்றார்.

6.30 pm: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, கிண்டி ஆளுநர் மாளிகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்தார். தமிழக அரசியலில் நிலவும் சூழல் குறித்து ஆளுநருடன் ஆலோசனை செய்கிறார்.

6.28 pm: தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓபிஎஸ் மட்டுமே: பொன்னையன் பேச்சு

நல்ல தலைமையின் கீழ் அதிமுக இயங்க வேண்டும். தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறினார். அதன் விவரம்: >தமிழக மக்களின் நலன் காக்க தகுதி படைத்தவர் ஓபிஎஸ் மட்டுமே: பொன்னையன் பேச்சு

5.11 pm: பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்த அவரை, முதல்வரின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர். அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட வேண்டும்; அவர் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று முதல்முதலில் அதிமுகவில் குரல் எழுப்பியவர் பொன்னையன் என்பது நினைவுகூரத்தக்கது.

4.45 pm: சென்னை ஆளுநர் மாளிகையை சுற்றி, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

4.33 pm: சென்னை வந்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

4.00 pm: கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.

3.45 pm: முதல்வராக ஓபிஎஸ், தமிழகத்துக்கு நீதி என்பதே நமது போராட்டம் என்று கவுதமி தெரிவித்துள்ளார். விரிவான செய்திகள்> >முதல்வராக ஓபிஎஸ் நீடிக்க வேண்டும்: கவுதமி விருப்பம்

3.40 pm: தங்களுடைய தொகுதி மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்த பிறகு, யாருக்கு வாக்களிப்பது (சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு) என முடிவெடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகர் அரவிந்த்சாமி யோசனை தெரிவித்துள்ளார். விரிவான செய்திகள்> >எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டியவை: அரவிந்த்சாமி யோசனை

3.30 pm: "யார் வேண்டுமானலும் என்னை வந்து சந்திக்கலாம். நான் மயிலாப்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில்தான் உள்ளேன். மக்களை சந்தித்து சேவை ஆற்றுவதை நிறுத்தப்போவதில்லை" என்று மயிலாப்பூர் தொகுதி அதிமுக எல்எல்ஏ நட்ராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விரிவான செய்திகள்> >தொகுதி மக்கள் கருத்தறிந்து முடிவு: மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் தகவல்

3.15 pm: "நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்'' என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். விரிவான செய்திகள்> >திமுக ஆட்சி விரைவில் மலரும்: ஸ்டாலின் நம்பிக்கை

2.30 pm: கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா புறப்பட்டுச் சென்றார்.

2.03 pm: ஓரளவுக்குதான் பொறுமை காப்பேன். அதற்கு மேல் அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம் என சசிகலா கூறியுள்ளார். விரிவான செய்திகள்> >ஓரளவுக்குதான் பொறுமை காப்பேன்: சசிகலா காட்டம்

1.55 pm: "யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்று நிரூபிக்கச் சொல்ல வேண்டும். ஆளுநர் தாமதப்படுத்துவது ஜனநாயக விரோத செயல்" என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

1.15 pm: மாஃபா பாண்டியராஜனைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வருவார்கள் என்று பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விரிவான செய்திகள்> >அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வருவார்கள்: ஓபிஎஸ் நம்பிக்கை

12.40 pm: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்றார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். பிறகு, ஓபிஎஸ்ஸுக்கு தன் ஆதரவை தெரிவித்தார். விரிவான செய்திகள்> >அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே ஓ.பி.எஸ்.ஸை ஆதரிப்பர்: அணி மாறிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜ் உறுதி

12.55 pm: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக, தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கக் கோரி, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார். விரிவான செய்திகள்>>எம்.எல்.ஏ.க்களுடன் சந்திக்க உடனே நேரம் ஒதுக்கக் கோரி ஆளுநருக்கு சசிகலா கடிதம்

12.40 pm: மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடக்கப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

12.21 pm: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

11.52 am:முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் பள்ளிக் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு முதல்வரை சந்திக்கும் முதலாவது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆவார்.

11.17 am: தனது வாக்காளர்களின் கருத்தைக் கேட்டு, யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுப்பேன் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். விரிவான செய்தி> > யாருக்கு ஆதரவு?- வாக்காளர்களை நாடுகிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

10.40 am: நாமக்கல் எம்.பி. பி.ஆர். சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார் ஆகிய இருவரும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். | விரிவான செய்தி > >ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக எம்.பி.க்கள் இருவர் ஆதரவு; சசிகலாவுக்கு தொடரும் பின்னடைவு

முந்தைய முக்கியச் செய்திகள்

* அதிமுக எம்எல்ஏ-க்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ‘உங்களது ஆதரவு யாருக்கு?’ என்பதை தெரிந்துகொள்ள ‘தி இந்து’ சார்பில் அவர்களின் அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டோம். பெரும்பாலான எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. விரிவான செய்தி> >அனல்பறக்கும் அதிமுக அரசியல்! - என்ன சொல்கிறார்கள் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?

* மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ செல்லூர் ராஜூவை (கூட்டுறவுத்துறை அமைச்சர்) நேரில் சந்தித்து மனு கொடுக்க அரசு சட்டமன்ற விடுதிக்கு சென்றபோது அவரை அங்கு காணவில்லை.விரிவான செய்தி> >அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என புகார்

* தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுக்கும் முடிவு பெரும் பாலும் மத்திய அரசின் அறிவுரையைச் சார்ந்திருக்கும் என்று முன்னாள் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார். விரிவான செய்தி> >மத்திய அரசின் அறிவுரைப்படியே தமிழக ஆளுநர் முடிவு எடுப்பார்: முன்னாள் ஆளுநர் ரோசய்யா கருத்து

* தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் மத்திய அரசிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 3 பக்க அறிக்கை தாக்கல் செய்ததாக நேற்றிரவு தகவல் வெளியானது. தொலைக்காட்சி செய்தி சேனல்களில் இதுதொடர்பாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆளுநர் மாளிகை அந்தச் செய்தியை மறுத்துவிட்டதால், அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. விரிவான செய்தி> >தமிழக அரசியல், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மத்திய அரசிடம் ஆளுநர் அறிக்கை தாக்கல்? - அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பு

* சசிகலா பதவியேற்பு விழாவுக்காக சென்னை பல்கலைக்கழக நூற் றாண்டு விழா மண்டபத்தில் செய் யப்பட்டுவந்த அரங்க வடிவமைப்பு களைப் பிரிக்கும் பணிகள் தொடங் கியுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக விழா மண்டபத்தில் சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகள் வாபஸ்: போலீஸ் பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது. விரிவான செய்தி> >சென்னை பல்கலைக்கழக விழா மண்டபத்தில் சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகள் வாபஸ்: போலீஸ் பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது

* காவல் துறை மூலம் அதிமுக எம்எல்ஏக் களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்ச ரும், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் தலைவருமான பா.வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார். விரிவான செய்தி> >காவல் துறை மூலம் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஓபிஎஸ் மிரட்டல்: போயஸ் தோட்ட வளாகத்தில் திரண்ட அதிமுக நிர்வாகிகள் கடும் குற்றச்சாட்டு

* ஜெயலலிதாவின் ஆன்மா என்ன நினைக்கும்? என்று தமிழக அரசியல் சூழல் குறித்து பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார். விரிவான செய்தி> > ஜெயலலிதாவின் ஆன்மா என்ன நினைக்கும்? - இயக்குநர் பார்த்திபன் கேள்வி

* பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலை தளங்களில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். விரிவான செய்தி> >அனல்பறக்கும் அதிமுக அரசியல்! - பேஸ்புக்கில் தனி பக்கம் வாட்ஸ்-அப் குரூப்கள் தொடக்கம்

* கல்பாக்கத்தை அடுத்த கூவத் தூரில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுவதால் அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட் டுள்ளது. விரிவான செய்திகள்> >கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் இடமாற்றமா? - அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x