மொழி மாற்றத் தொடர்களுக்கு எதிராக ஜெயலலிதாவை சந்திக்க சின்னத்திரை கலைஞர்கள் முடிவு

மொழி மாற்றத் தொடர்களுக்கு எதிராக ஜெயலலிதாவை சந்திக்க சின்னத்திரை கலைஞர்கள் முடிவு
Updated on
1 min read

மொழி மாற்றத் தொடர்களை நிறுத்தக் கோரி, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு அளிக்க, சின்னத்திரை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

மொழி மாற்றத் தொடர்களை நிறுத்தக் கோரி இன்று (ஏப்ரல் 15) ஒரு நாள் சின்னத்திரை தொடர்பான பணிகளும் நிறுத்தப்பட்டன.

தென்னந்திய சின்னத்திரை தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகியவை இப்போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.

வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் இன்று காலை சின்னத்திரை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பலரும் மொழி மாற்றத் தொடர்களால், சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று விவரித்தார்கள்.

இக்கூட்டத்தின் முடிவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள் வருமாறு,

* மொழி மாற்றத் தொடர்களால் சின்னத்திரையில் பணிபுரியும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகையர் மற்றும் பிற தொழில் நுட்ப கலைஞர்கள் என்று 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் தமிழ் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் மொழி மாற்றத் தொடர்களை உடண்டியாக தவிர்க்க வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களை கேட்டுக் கொள்வது.

* மொழி மாற்றத் தொடர்களுக்கு பதிலாக நேரடி தொடர்களுக்கு வாய்ப்பளித்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழ்விக்க வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுப்பது.

* இது தொடர்பாக, ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளிப்பது.

* மேலும், இன்றே அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நேரடியாக சென்று கோரிக்கை மனுக்களை வழங்குவது.

இக்கூட்டத்தில் ராதிகா சரத்குமார், நளினி, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், பெப்சி சிவா, இயக்குநர் கெளதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in