

மாமல்லபுரம் விடுதியில் மருத்துவக் கல்லூரி மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்து, மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர், கேரளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் மகள் என கூறப்படுகிறது.
அங்குள்ள ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய இடங்களை சுற்றி பார்த்துவிட்டு விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். இவருடன் வந்த சில நண்பர்கள் மதுபோதையில் பக்கத்து அறை யில் படுத்திருந்தனர். மருத்துவ மாணவி வேறு அறையில் தங்கியுள்ளார். எனினும், அவர் அறையை சரியாக பூட்டவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், நள்ளிரவில் அறைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், மருத்துவ மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத் திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இருளில் அந்த நபர் யார் என்று மாணவியால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை என தெரிகிறது.
இதுதொடர்பாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் தெரிவித்துள்ளார்.
போலீஸார் அவருடன் வந்த நண்பர்கள் மற்றும் விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சேகரிடம் கேட்டபோது, ‘மாணவி, சில நபர்களை சந்தேகத்தின் அடிப் படையில் தெரிவித்துள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். யார் குற்றவாளி என்பது விசாரணையில் முடிவில் தான் தெரியவரும்’ என்றார். மாணவிக்கு குளிர்பானத்தில் யாரேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.