

கொருக்குப்பேட்டையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 உள்ளிட்ட நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை தண்டையார்பேட்டை அடுத்த கொருக்குப்பேட்டை ரயில்வே காலனியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் எரிந்துவிட்டன என்ற செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தேன். வீடு எரிந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிதியுதவி, 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை ஆகிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். தீ விபத்து குறித்த செய்தியை அறிந்தவுடன், சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று, பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும், நிவாரண உதவிகளை வழங்கவும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை மாவட்ட ஆட்சியர், பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வெற்றிவேல் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.