

புதிய திட்டமாக "உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டம்" தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பின்படி, புதிய திட்டமாக "உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டம்" தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, விளையாட்டுத் திறமைகளின் அடிப்படையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடிய தலைசிறந்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அயல்நாட்டுப் பயிற்சி, அயல்நாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பிற்கான செலவினம், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேவையான இதர செலவினங்களுக்கான தொகை வழங்கப்பட்டு சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வகையில் வழி வகுக்கப்பட்டது.
அதனடிப்படையில், வாள் சண்டை வீராங்கனையான சி.ஏ.பவானிதேவி இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, இதுவரையில் ரூ.22,04,512/- வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 17.11.2016 முதல் 20.11.2016 முடிய பிரான்ஸ் நாட்டின் ஓர்லின்ஸ் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை வாள் சண்டைப் போட்டிகளில் கலந்து கொண்டமைக்காகவும், கடந்த 16.12.2016 முதல் 18.12.2016 முடிய மெக்ஸிகோ நாட்டின் கேன்கன் நகரில் நடைபெற்ற வாள் சண்டை கிராண்ட் ப்ரி போட்டிகளில் கலந்து கொண்டமைக்காகவும், செலவினத் தொகையாக ரூ.5,43,386/- (ரூபாய் ஐந்து லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து மூன்னூற்றி எண்பத்தி ஆறு மட்டும்) அனுமதித்து, மேற்படி தொகைக்கான காசோலையினை முதல்வர் பழனிசாமி இன்று (24.2.2017) பவானிதேவியின் தாயாரிடம் வழங்கினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.