

விபத்துக்குள்ளான தி. நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கும். 3 நாட்களுக்குள் கட்டிடம் முழுவதுமாகத் தரை மட்டமாக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பகலில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் அபாயம் அதிகமாக இருந்திருக்கும். மீட்பு நடவடிக்கைகளில் அரசுத்துறைகள் சிறப்பாக செயல்பட்டன. 150 தீயணைப்பு வீரர்கள் திறமையாக செயல்பட்டனர். 30 மணி நேரமாக இருந்த தீ மற்றும் புகை தற்போது முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டிடம் தனது உறுதித் தன்மையை முழுவதுமாக இழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் இடிப்புப் பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளன. 3 நாட்களுக்குள் கட்டிடம் முழுவதுமாகத் தரை மட்டமாக்கப்படும்.
செலவு நிறுவனத்திடம் பெறப்படும்
கட்டிடங்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் வெடி வைத்துத் தகர்க்கப்படாது. இயந்திரம் மற்றும் ஆட்களைக் கொண்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்படும். மத்திய அரசின் ராட்சத இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெறும். இடிக்கும் பணிக்கு ஆகும் செலவு முழுவதும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்.
இடிப்பு பணிகளின்போது அருகாமையில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும். 150 மீட்டர் சுற்றளவில் யாரும் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
தி. நகர் கட்டிடங்களில் ஆய்வு
வணிகர்கள் மிகுந்த இத்தகைய பகுதிகளில் இனியும் விபத்து ஏற்படக்கூடாது. இனிமேல் இங்குள்ள ஒவ்வொரு கட்டிடங்களும் முறையாக ஆய்வு செய்யப்படும். அதையும் மீறி விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சியை அளிக்க வலியுறுத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.