Published : 03 Sep 2016 08:02 AM
Last Updated : 03 Sep 2016 08:02 AM

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்: ராமகோபாலன் தகவல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன், மாநிலத் தலைவர் சி.சுப்பிரமணியம், துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக அளித்த பேட்டி:

இந்து முன்னணி சார்பில் வரும் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி திருவிழாவாக தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 501 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.

தமிழகத்தில் கடந்த 33 வருடங்களாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறோம். சாதி, கட்சி, மொழி போன்ற அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் விழாவாகவே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

விழா பந்தலில் நிலவேம்பு குடிநீர்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் விநாயகர் சதுர்த்தி விழா பந்தலில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படும். கடந்த 20 ஆண்டுகளாக சென்னை திருவல்லிக்கேணி பொதுவீதி வழியாக விநாயகர் ஊர்வலம் செல்ல போலீசார் தடை விதித்து வருகின்றனர். இந்தாண்டு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 10 பேர் மட்டும் சிறிய விநாயகர் சிலையை பொதுவீதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக் கொண்டுள்ளோம். சென்னையில் விநாயகர் சிலைகள் வரும் 11-ம் தேதி சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்படும்.

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடியது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் பள்ளி சிறுவர்கள் உள்பட 546 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோல வழக்கு பதிவு செய்யப்படவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்ற அடக்குமுறைகள் கையாளப்படுவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x