

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 22-ஆம் தேதி, (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது.
அன்றைய தினம் 160 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அணுஉலை முதல் யூனிட்டில், சில ஆயத்தப் பணிகள் முடிந்த பிறகு மின் உற்பத்தி மீண்டும் துவங்கும் என்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சில ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆயத்த பணிகளுக்காக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்உற்பத்தி மீண்டும் நேற்றிரவு 9.43 மணியளவில் தொடங்கப்பட்டது.முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தெற்கு மத்திய தொகுப்புக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.