கருப்பசாமி பாண்டியன், ஞானசேகரன் அதிமுகவில் இணைந்தனர்

கருப்பசாமி பாண்டியன், ஞானசேகரன் அதிமுகவில் இணைந்தனர்
Updated on
1 min read

நெல்லை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், தமாகாவில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் ஞானசேகரன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சென்னை போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த கருப்பசாமி பாண்டியனும், ஞானசேகரனும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.

கருப்பசாமி பாண்டியன்

1972 முதல் 1996 வரை அதிமுகவில் கிராம கிளைச் செயலாளர் முதல் மாநில துணைச் செயலாளர் வரை கருப்பசாமி பாண்டியன் பல்வேறு பதவிகளை வகிந்து வந்தார். அதற்குப் பிறகே திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

திமுக திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்து வந்த கருப்பசாமி பாண்டியன், கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக, 19 மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் எந்தக் கட்சியிலும் இணையாமல் மவுனமாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

வேலூர் ஞானசேகரன்

தமாகா துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வேலூர் ஞானசேகரன் நீக்கம் செய்யப்பட்டதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஞானசேகரன் அதிமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியதாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் மீது இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமாகா வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தமாகா நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைய முடிவு செய்திருப்பதாக ஞானசேகரன் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுடன் சந்திப்பு

முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை ஞானசேகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை போயஸ்கார்டனில் சந்தித்தார். அதன் பிறகு அதிமுகவில் இணைந்தார்.

ஞானசேகருடன் திருச்சி, திருவள்ளூர், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமாகாவின் முக்கிய நிர்வாகிகள் 69 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

தமாகா மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக, காங்கிரஸ் மற்றும் திமுகவில் இணைந்து வருவது தமாகாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in