

மாமல்லபுரம் பகுதியில், தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை பாதுகாத்து வந்த காவலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப் பட்ட வழங்கில், தொடர் புடைய முக்கிய குற்றவாளியை மாமல்லபுரம் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகில் உள்ள கிருஷ்ணன்காரனை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது தனியார் வங்கியின் ஏடிஎம் மையம். இங்கு சாத்தான் குளம் பகுதியை சேர்ந்த முருகன்(54) என்பவர், ஐந்தாண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் 14-ம் தேதி நள்ளிரவில் பணியில் இருந்தபோது, ஏடிஎம் மையத்தில் பணம் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள், அவரை கொலை செய்து, இயந்திரத்தை உடைக்க முயன்றபோது, ரோந்து போலீஸாரின் வாகன சத்தத்தை கேட்டு அங்கிருந்து தப்பினர்.
ஏடிஎம் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் இளைஞர் ஒருவர் முகத்தில் முகமுடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து கேமராவில் பதிவான உருவத்தைக் கொண்டு, மாமல்லபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தனிப்படையை சேர்ந்த மாமல்லபுரம் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார், ஏடிஎம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருப்போரூர் அடுத்த மேலையூரை சேர்ந்த சதீஷ்பாபு என்பவரை செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பகுதியில் நேற்று கைது செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமைறைவான மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.