

சட்டப்பேரவை விதிகளையும், மரபுகளையும் திமுக, அதிமுக உறுப்பினர்கள் மதிக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சி உறுப்பினர்களும் பேரவை விதிகளையும், மரபுகளையும் மதிக்கவில்லை. இரண்டு கட்சி உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இரு கட்சி உறுப்பினர்களும் பேரவை விதிகளை மதிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும். தேமுதிக, தமாகா கட்சிகள் மீது எங்களுக்கு பெரும் மரியாதை உள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுப்பது அவர்களின் விருப்பம். மதிமுகவின் முழு பலத்தை திருச்சியில் நடக்கவுள்ள அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் நிரூபிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.