Published : 15 Oct 2014 04:13 PM
Last Updated : 15 Oct 2014 04:13 PM

மதுரையில் மது விற்பனையை அதிகரிக்காவிட்டால் சஸ்பெண்ட்: ஊழியர்களுக்கு டாஸ்மாக் அதிகாரி எச்சரிக்கை

டாஸ்மாக் மது விற்பனையில் தமிழகத்தில் கோவை முதலிடத்திலும், தென் மாவட்டங்களில் மதுரை கடைசி இடத்திலும் உள்ளது. விற்பனையை அதிகரிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என மதுரை மண்டல டாஸ்மாக் மேலாளர் தனபால் எச்சரித்துள்ளார்.

தீபாவளிக்கு மது விற்பனையை அதிகரிப்பது குறித்து, மதுரை மாவட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் பாஸ்கர், முருகேஸ்வரி, 300-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளின் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இதில் தென்மண்டல டாஸ்மாக் மேலாளர் தனபால் பேசியது: கூடுதல் விலைக்கு மது விற்பது உட்பட பல்வேறு தவறுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஆனாலும், இதுகுறித்து பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மது விற்பனையில் ஊழியர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

மேற்பார்வையாளர்கள் பலர் கடைக்கே வராமல், சொந்த வேலைகளை பார்க்க சென்று விடுவதாகப் புகார் உள்ளது. வங்கி உட்பட பல பணிகள் இருந்தாலும் இரவு 7 மணிக்குள் கடையில் இருக்க வேண்டும். மது விற்பனையில் மதுரை மாவட்டம் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. கோவை முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூரில் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மது விற்பனையை அதிகரிக்காவிட்டால் அந்த கடையின் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றார்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, 'குறைந்த விலையுள்ள மது அனுப்பப்படுவதில்லை. தனியார் பொழுதுபோக்கு கிளப்புகள், ஓட்டல் பார்கள் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன.

கடந்தவாரம் வரை தேவையான சரக்குகள் வழங்கவில்லை. கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிவரும் வேன்களும் வரிசைப்படி இறக்குவதில்லை. இப்பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்த்தால் விற்பனை அதிகரித்துவிடும். அதைவிடுத்து ஊழியர்களை மட்டுமே குறை சொல்வதை ஏற்க முடியாது' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x