

எண்ணூர் அருகே கடலில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் 150 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எண்ணூர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்து காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அதைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் எண்ணெய் படலம் மிதந்து வருகிறது. அவற்றை அகற்றும் பணியில் பல்வேறு துறைகள் களமிறங்கினாலும், அவர்கள் சார்பில் மீனவர்களையே சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்கள் எந்த பேரிடர் தடுப்பு பயிற்சியும் பெறாதவர்கள். இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறை தனது பேரிடர் அடிப்படை பயிற்சி பெற்ற வீரர்களை நேரடியாக களமிறக்கியுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு தீயணைப்பு துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் கூறியதாவது:
கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில், தீயணைப்பு துறையின் 150 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பச்சை நிற சீருடை, ரப்பர் கையுறை, பூட்ஸ் ஆகிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் உரிய பாதுகாப்புடன், எண்ணெயை அகற்றி வருகின்றனர். இப்பணிக்காக இவர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணா மலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த இரு நாட்களாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் அடிப்படை பேரிடர் தடுப்பு பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். அதனால் எங்களது 4 தீ தடுப்பு வாகனங்களை அங்கு கொண்டு சென்று, பாறைகள் மீது படிந்துள்ள எண்ணெய் மீது, அழுத்தம் கொண்ட நீரை பீய்ச்சி அடித்து, அவற்றை அகற்றி வருகின்றனர். மற்றவர்களால் இதுபோன்று பாறைகள் மீது படிந்துள்ள எண்ணெயை எளிதாக எடுக்க முடியாது. அதனால் எங்கள் படை வீரர்களின் பணி, இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.