

தமிழகத்தில் முதல் முறையாக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் தொடங்கப் பட்டுள்ளது.
ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி - மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறையில் ரூ.3 லட்சம் செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பறையில் கடந்த வாரம் முதல் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கல்லூரி டீன் கீதா லட்சுமி, இஎன்டி துறை தலைவர் டி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
மாணவ, மாணவிகளுக்கு கரும் பலகையில் பாடம் எடுத்து வந்த காலம் மாறிவிட்டது. மாணவர்கள் செல்போன், லேப்டாப் என நவீன தொழில் நுட்பத்துக்கு மாறி
விட்டனர். அதனால் தமிழகத்தில் முதல் முறையாக ஸ்மார்ட் கிளாஸ் ரூமை தொடங்கியுள்ளோம். சினிமா திரை போல 16 எம்எம் அளவில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன், நவீன கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து வசதிகளும், இந்த ஸ்மார்ட் போர்டில் உள்ளது.
இஎன்டி மாணவ, மாணவி களுக்கு ஸ்மார்ட் போர்டு மூலம் தற்போது பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் ஆன் லைன் மூலமாகவும் பாடங்களை எடுக்கின்றனர். வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்களை மாணவ, மாணவிகள் தங்களுடைய செல்போன் மற்றும் மடிக்கணினியில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். இஎன்டி துறையின் தகவல்கள், பாடங்கள் மற்றும் கட்டுரைகளுடன் உருவாக்கப் பட்ட சாப்ட்வேர் ஸ்மார்ட் போர்டில் போடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போர்டில் பேராசிரியர்கள் எழுதுவது, பாடம் நடத்துவது மற்றும் பேசுவது போன்ற அனைத்தும் பதிவாகிவிடும். இதனை மாணவ, மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். அடுத்த கட்டமாக மேலும் 9 துறைகளில் ஸ்மார்ட் போர்டு வைக்கப்பட உள்ளது. மேலும் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.