

குற்றவாளியாக தண்டனை பெற்றவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்படவேண்டும் என்ற விதி இருப்பதால், சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நீடிக்க முடியாது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தண்டனை பெற்ற ஒருவரது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறக் கூடாது. இதன்படி சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டால், அவர் எந்த ஜனநாயக பணிகளிலும் பங்கேற்க முடியாது. கட்சியின் பொதுச் செயலாளர் என்பவர் எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் வேட்பாளர்களை அறிவிப்பார். தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது, சின்னம் கோரும் ‘பி’ படிவத்திலும் அவர்தான் கையொப்பமிட வேண்டும். இந்த சூழலில், சசிகலாவால் இப்பணிகளை மேற்கொள்ள முடியாது.
மேலும், அதிமுக விதிகளின்படி தண்டனை பெற்றவர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்படுவார். இது எம்ஜிஆர் 1972-ல் கட்சியை தொடங்கியது முதலே பின்பற்றப்படும் நடைமுறை. அதன்படி, சசிகலா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட வேண்டியவர். எனவே, தண்டனை பெற்று, அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் வகிக்க தகுதி இல்லாத ஒருவர், கட்சியின் எந்த பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.
இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.