Last Updated : 19 Apr, 2017 03:36 PM

 

Published : 19 Apr 2017 03:36 PM
Last Updated : 19 Apr 2017 03:36 PM

கட்சியை விட்டு ஒதுங்கும் மனப் பக்குவம் எனக்கு உண்டு - தினகரன்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியில் குறிப்பாக தினகரனுக்கு ஒட்டுமொத்தமாக கட்சிக்குள்ளிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் அவர் கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இது ‘தர்ம யுத்தத்திற்கு’ கிடைத்த முதல் வெற்றியென ஓபிஎஸ் அணி ஆரவாரித்துள்ளது.

இந்நிலையில், முதற்கட்டமாக, அந்நிய செலாவணி வழக்கில் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான தினகரன் மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாலை 3 மணிக்கு நடைபெறவிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது . இது போன்ற கூட்டம் நடைபெறாது, நடத்த முடியாது என்று அவைத்தலைவர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

ரத்தாகும் டெண்டர்கள்?

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தினகரன் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டெண்டர்களை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (புதன்கிழமை) காலை சென்னை அடையாறு இல்லத்திலிருந்து புறப்பட்ட அவர் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "கட்சிக்கும் ஆட்சிக்கும் உகந்த முடிவை எடுப்பேன். இன்று மாலை உங்களை (பத்திரிகையாளர்களை) சந்தித்து எனது முடிவை தெரிவிப்பேன். என்னை யாரும் ஓரங்கட்டமுடியாது. எனக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது. நான் எடுக்கும் முடிவுகள் கட்சி நலன் சார்ந்ததாகவே இருக்கும். எல்லோரும் எங்களது எம்.எல்.ஏ.க்கள்தான். அப்படியிருக்க எண்ணிக்கை அடிப்படையில் எனது ஆதரவாளர்கள் என்று யாரையும் குறிப்பிட அவசியம் இல்லை" என்றார்.

அமைச்சர்கள் இத்தகைய முடிவு எடுக்க என்ன காரணம் என நிருபர்கேட்டதற்கு "நீங்கள் இந்தக் கேள்வியை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்" என்று கூறிச் சென்றார்.

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், "கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் நேற்றே ஒதுங்கிவிட்டேன்" என்றார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது,

’’கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.அமைச்சர்கள் என்னிடம் ஆலோசித்திருந்தால் நானே அறிவித்திருப்பேன்.

கடந்த 14-ம் தேதி வரை அமைச்சர்கள் என்னை சந்தித்துவந்தனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் என்னுடன் தொலைபேசியில் பேசினர். 4 நாட்களில் திடீரென்று அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.

அமைச்சர்கள் சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் என்னை கட்சியிலிருந்து நீக்கப்பார்க்கிறார்கள். அவர்களது அச்சத்துக்கு என்ன காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

என்னை நீக்கினால்தான் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்மை கிடைக்குமென்றால் அந்த நன்மை அவர்களுக்கு கிடைக்கட்டும். எக்காரணத்தாலும் கட்சியில் பிளவு ஏற்படக்கூடாது என்பதே எனது விருப்பம். கட்சியில் பிளவு ஏற்பட நான் காரணமாக இருக்க மாட்டேன். அமைச்சர்களுடன் எந்த சண்டை சச்சரவையும் நான் விரும்பவில்லை.

துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்பதவியை எனக்கு அளித்தவர் பொதுச்செயலாளர். அதனால், பதவியை ராஜினாமா செய்வதற்கில்லை.

இதுகுறித்து சசிகலா முடிவெடுப்பார். எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை அதனால் ஏமாற்றமும் இல்லை. இனியும் எனது அரசியல் வாழ்க்கை தொடருமா என்பதை இறைவன் தீர்மானிப்பார்" என்றார்.

ட்விட்டரில் நன்றி:

ட்விட்டர் பதிவுகளில், ''இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்க சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது.

நான் ஒதுங்கி இருப்பதால் கட்சிக்கு நன்மை என்றால் ஒதுங்கியிருப்பதில் தப்பில்லை. அப்படி நினைக்கக்கூடிய முதிர்ச்சி உள்ளவன் நான்.

கட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு என்றும் நான் காரணமாக இருக்க மாட்டேன்.

எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்தக் காரணத்தை கொண்டும் கட்சி பிளவுபட்டு விடக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்.

எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

தினகரன் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணிகளுக்கிடையே கட்சி இணைப்பு பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x