Published : 14 Dec 2016 07:57 PM
Last Updated : 14 Dec 2016 07:57 PM

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 'வார்தா’ புயல் காரணமாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட சேதங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், '''வார்தா’ புயல் காரணமாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட சேதங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் மின்மாற்றி மற்றும் மின்பாதை சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த ஆய்வுகளின் போது முதல்வருடன் மூத்த அமைச்சர்களும் உடனிருந்தனர்.

மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 43 பேர்களுக்கு நிவாரண உதவித் தொகையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். அதன் பின்னர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து அமைச்சர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மண்டல அலுவலர் மற்றும் உயரதிகாரிகளுடன் விரிவான ஆய்வு நடத்தினார்.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 'வார்தா' புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். 'வார்தா' புயல் சென்னையில் கரையைக் கடக்கும் என்ற அறிவிப்பு வந்தவுடன், தமிழக அரசு விரைந்து மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, விலங்குகள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்பட்டதன் விளைவாக, விலங்குகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், புயலின் காரணமாக அடித்த சூறாவளிக் காற்றில் 10,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன; 950 மீட்டர் நீளத்திற்கு பூங்காவின் வெளிப்புறப் பாதுகாப்புச் சுற்றுச் சுவர் விழுந்து விட்டது.

விலங்குகளின் இருப்பிட நிழற்கூரைகள், பார்வையாளர் ஓய்விடங்கள், இருக்கைகள் போன்றவை சேதமடைந்துள்ளன. குடிநீர்க் குழாய்கள், இணைப்புக் குழாய்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன. மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் விநியோக அறைகள், இணைப்புச் சாலைகள், குடியிருப்புக் கட்டிடங்கள், அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவையும் சேதமடைந்துள்ளன. இவற்றை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட முதல்வர் உடனடியாக சீரமைப்புப் பணிகளை விரைந்து செய்திட வனத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அடுத்து, வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மாம்பாக்கம் என்னுமிடத்தில் 250 KVA மின்மாற்றி கீழே விழுந்து சேதமடைந்துள்ளதை முதல்வர் பார்வையிட்டார். மாம்பாக்கத்திலிருந்து கேளம்பாக்கத்திற்கு 33 KV மின்பாதையில் விழுந்து விட்ட மின்கம்பங்களை மின்சார வாரிய ஊழியர்கள் சீர் செய்வதை பார்வையிட்டு மின்சார வாரிய ஊழியர்களின் பணியைப் பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

மேலும், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் 'வார்தா' புயலால் பாதிக்கப்பட்ட 43 பேர்களுக்கு நிவாரணத் தொகையாக 13,94,200/- ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோருடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து விரிவான ஆய்வினை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் அறிவுரை வழங்கினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x