Published : 20 Apr 2017 07:34 AM
Last Updated : 20 Apr 2017 07:34 AM

அதிமுகவில் இருந்து ஒதுங்கினார் டிடிவி தினகரன்: பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஓபிஎஸ் - பழனிசாமி - கட்சிப் பொறுப்புகள், அமைச்சரவை குறித்து விரைவில் முடிவு

அதிமுகவில் இருந்து ஒதுங்கிவிட் டதாக டிடிவி தினகரன் அறிவித்து விட்டதால் அதன் இரு அணிகளும் இணைவதில் இருந்த தடைகள் நீங்கின. இதையடுத்து கட்சி இணைப்பு மற்றும் பொதுச்செயலாளர், முதல்வர், அமைச்சர் பதவிகள் தொடர்பாக இரு தரப்பும் இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கி வைக்கப் பட்டுள்ள அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை மீட்கும் வகையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்து அதற்கான முயற்சி யில் இறங்கின. ‘‘இரு அணிகளும் இணைவது தொடர்பாக யார் பேச வந்தாலும் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்’’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 17-ம் தேதி அறிவித்தார். அவரின் கருத்தை சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றதால், இணைப்பு உறுதியானது.

சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் நிபந்தனை குறித்து முதல்வர் எடப்பாடி பழனி சாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் இரவு அவசர ஆலோசனை நடத்தினர். அதன்பின், ‘டிடிவி தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இரு அணிகளும் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் நடத்த உள்ளோம்’ என அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு வெற்றி வேல், தங்க தமிழ்ச்செல்வன், எஸ்.டி.கே.ஜக்கையன் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, புதன்கிழமை (நேற்று) மாலை 3 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலா ளர்கள் கூட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

இதனால், நேற்று காலையில் இருந்தே ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்ற தினகரன், முன்னதாக நிருபர்களிடம் கூறும் போது, ‘‘என்னை யாரும் ஒதுக்க முடியாது. எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என எல்லோரும் என்னிடம்தான் இருக்கின்றனர்’’ என்றார்.

பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு வந்த தினகரன் தனது முடிவை மாற்றிக்கொண்டார். ‘‘அமைச்சர்கள் ஏதோ பயத்தில் இவ்வாறு செய்கின்றனர். அதிமுக வில் இருந்து நான் நேற்றே ஒதுங்கி விட்டேன். கட்சியும், ஆட்சியும் களங்கப்படாமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், பொதுச் செயலாளரான சசிகலாவிடம் ஆலோசித்த பின்னரே பதவியை ராஜினாமா செய்வேன்’’ என தெரிவித்தார். தனது ட்விட்டர் பதிவில், ‘இதுவரை ஒத்துழைப்பு அளித்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து ஒதுங்கி விட்டதாக தினகரன் அதிகாரப்பூர்வ மாக அறிவித்துவிட்டதால், இரு அணிகளும் இணைவதில் இருந்த தடை நீங்கியுள்ளது. இதுதொடர் பாக கருத்து தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், ‘‘சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தது, எங்கள் தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அவரது அணியில் உள்ள நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடக்கிறது. இதில், எடப்பாடி அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த கே.பி.முனுசாமி தலைமையில் குழு அமைக்கப்படும் என கூறப்படு கிறது.

அதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியிலும் குழு அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மூத்த அமைச்சர்கள் குழுவில் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. நேற்று அஷ்டமி, இன்று நவமி என்பதால் இன்று இரவுக்குள் இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு அல்லது நாளை காலை பேச்சுவார்த்தை தொடங்கப்படலாம் என இரு தரப்பு நிர்வாகிகளும் தெரிவித்தனர்.

சென்னை எழிலகத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங் கேற்ற வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘‘உள்ளாட்சித் தேர்தலுக்கு சின்னம் மிகவும் முக்கியம். கட்சி, ஆட்சியைக் காப்பாற்ற அனைவரும் தியாகத் துக்கு தயாராக உள்ளோம். அதற்கு வரையறை கிடையாது. கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதே நோக்கம். ஓபிஎஸ்சை பார்த்துதான் விசுவாசத்தை கற்றுக்கொண்டோம். அவரை எப்போதும் நாங்கள் விமர்சித்ததில்லை’’ என்றார்.

எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ளோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது, ஓபிஎஸ் வைக்கும் எவ்வித நிபந்தனைக்கும் எடப்பாடி தரப்பினர் தயாராக இருப்பதையே காட்டுவதாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்பது ஓபிஎஸ் தரப்பின் பிரதான நிபந்தனை. அதை எடப்பாடி தரப்பு ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தகட்டமாக ஆட்சி, கட்சி யில் பங்கு தொடர்பான விவரங்கள் பேச்சுவார்த்தையில் எடுத்துக் கொள்ளப்படும். புதிய பொதுச்செய லாளர் தேர்வு செய்யப்படும் வரை கட்சியை வழிநடத்துவதற்கு மூத்த நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆட்சியை பொறுத்தவரை, ஓபிஎஸ் தரப்பு முதல்வர் மற்றும் சில முக்கிய அமைச்சர் பதவிகளை கேட்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் முதல்வரானால், எடப்பாடி துணை முதல்வராவார் என்றும், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு கூடுதலாக உள்ள சில துறைகள் புதியவர்களுக்கு ஒதுக்கப்படலாம் என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x