

# தொடர் வறட்சி காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் அழிந்துவருகிறது. போதிய மழைப் பொழிவு இல்லாததால், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியிலுள்ள ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளின் விவசாயம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. மானாவாரிப் பயிர்களான சோளம், கம்பு சாகுபடியும் இந்த ஆண்டு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. ஏராளமான தென்னை மரங்களும் பட்டுப்போய்விட்டன.
# சிவகாசியில் பட்டாசுத் தொழிலில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. மேலும், இந்தத் தொழிலில் உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்களுக்கு நிரந்த வேலைவாய்ப்பும் இல்லை. பட்டாசு ஏற்றுமதிக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாத சூழலுடன் குறைந்த கூலி என்பதால், தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பாகப் பணிபுரிய தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கான காப்பீட்டுச் செலவுகளை தொழிற்சாலை நிர்வாகங்கள் செய்துதர வேண்டும்.
# சிவகாசியின் அச்சுத் தொழிலில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறிய லேபிள் தொடங்கி நோட்டுப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள், திரைப்படச் சுவரொட்டிகள் உள்ளிட்ட எல்லாவிதமான அச்சுப் பணிகளும் இங்கு உலகத் தரத்துக்கு இணையாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும், அச்சுத் தொழிலை வளம்பெறச் செய்வதற்கான எந்த முயற்சிகளும் இதுவரை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. தொடர் மின்வெட்டு அச்சகத் தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருவதால் தொழிலாளர்கள் பலர் வேலையிழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
# ராஜபாளையத்தின் நூற்றுக் கணக்கான நூற்பு ஆலைகளில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனாலும், தொழிலாளர்களுக் கான நிரந்தர வருமானம் இல்லாமை, ஏற்றுமதியிலுள்ள பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்படாதது, மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் நூற்பு ஆலைத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
# சாத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் ஏராளமான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இந்தத் தொழிலில் தற்போது இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், விபத்துகள் பல மடங்கு குறைந்துவிட்டது. ஆனாலும், மூலப்பொருட்கள் விலையேற்றம் காரணமாகத் தொழில் சரிந்துவருகிறது.
இந்தத் தொழிலில் மெழுகை உருக்குவது முக்கிய அம்சம். ஆனால், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் உருகிக்கொண்டிருக்கும் மெழுகு மீண்டும் உறைந்துவிடுகிறது. திரும்பவும் முதலிலிருந்து அதனை உருக்க வேண்டும். ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்தால் கிலோவுக்கு ஐந்து ரூபாய் செலவு கூடுதலாகிறது. தற்போது மத்திய அரசு விதித்து வரும் 6% சுங்க வரியை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அந்தத் துறையினரின் கோரிக்கை.
# பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடத்திலிருந்த விருதுநகர், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தொழிலில் சரிவைச் சந்தித்துவருகிறது. பல்வேறு பகுதிகளில் விளையும் பொருட்களை விருதுநகரிலுள்ள மில்களுக்குக் கொண்டுவருவதற்கும், தரம் பிரிக்கப்பட்ட பொருட்களை வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்குக் கொண்டுசெல்வதற்கும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில்வே கிடங்கு கட்டப்பட்டது. பலசரக்கு, மளிகைப் பொருள்கள் அனைத்தும் இங்கு சேமித்து வைக்கப்பட்டு, சரக்கு ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், வர்த்தகம் குறைந்துபோனதால் சரக்கு ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டதோடு, ரயில்வே கிடங்கு பயன்பாடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
# விருதுநகருக்குப் பொருட்களைக் கொண்டு வருவதற்கும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விருதுநகரிலிருந்து மற்ற ஊர்களுக்குக் கொண்டுசெல்வதற்கும் லாரிகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. விருதுநகரிலுள்ள சந்துகளுக்குள் ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கான லாரிகள் வந்துசெல்வதால் சாலைகள் தரம் இழந்து காணப்படுகின்றன. பாதாளச் சாக்கடைப் பணிகள் பாதியில் நிற்பதாலும், புதிய சாலைகள் போடப்படாததாலும் சாலைகள் குண்டும்குழியுமாகக் காட்சியளிக்கின்றன.
# விருதுநகர் - சாத்தூர் இடையே 2,400 ஏக்கர் தொழில் பூங்கா திட்டம், மருத்துவக் கல்லூரித் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
# விருதுநகரில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பாதாள சாக்கடைத் திட்டத்தால் சாலைகள் சேதமடைந்ததால் பேருந்துகள் ஊருக்குள் வர முடியவில்லை.
# திருப்பரங்குன்றத்தைப் புராதன நகராக அறிவிக்கும் திட்டம்பற்றி அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மறந்தே போய்விட்டனர்.
# திருமங்கலம் - டி.கல்லுப்பட்டி - திருவில்லிபுத்தூர் ரயில்பாதை, திருமங்கலம் விமான நிலைய சாலையில் மேம்பாலம் ஆகிய திட்டங்களும் கிடப்பில் உள்ளன.