மாயமான ராணுவ விமானம் தேடும் பணி: மறு ஆய்விலும் சாதகமான தகவல்கள் இல்லை

மாயமான ராணுவ விமானம் தேடும் பணி: மறு ஆய்விலும் சாதகமான தகவல்கள் இல்லை

Published on

ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மாயமான ராணுவ விமானத்தின் உடைந்த பாகங்களா என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டதிலும் சாதகமான தகவல்கள் கிடைக்கவில்லை.

சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் 29 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் எதிலுமே நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடலின் மேற்பரப்பில் விமானத்தை தேடும் பணி கடந்த 2-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான ‘சாகர்நிதி’, மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்ர ரத்னாகர்’ ஆகிய இரு ஆராய்ச்சிக் கப்பல்கள், ‘நிருபக்’ என்ற கடற்படை கப்பல், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 4 கப்பல்கள் மாயமான விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. கப்பல்கள் நடத்திய தேடுதலில், கடலுக்கு அடியில் சந்தேகப்படும் விதத்தில் 54 பொருட்களை கண்டுபிடித்தன. இதில் 29 பொருட்கள் விமானத்தின் பாகங்கள் இல்லை என்பது ஆராய்ச்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 25 பொருட்கள் மாயமான விமானத்தின் பாகங்களா என்பதை உறுதி செய்ய, அந்த இடங்களில் மறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்ர ரத்னாகர்’ கப்பல் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 24-ம் தேதியில் இருந்து இந்த மறு ஆய்வு பணி நடந்து வருகிறது. இதில் இதுவரை மாயமான விமானம் குறித்து சாதகமான தகவல்கள் கிடைக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் மறு ஆய்வு பணி முடியவுள்ளது. விமானத்தை கண்டுபிடிக்க அடுத்து எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விமானம் கடலுக்குள் விழுந்து 37 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, மாயமான விமானத்தில் பயணம் செய்த 29 பேரின் குடும்பத்தினரும் கலக்கத்தில் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in