2ஜி விவகாரம்: ஜேபிசி தலைவருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

2ஜி விவகாரம்: ஜேபிசி தலைவருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
Updated on
1 min read

2ஜி விவகாரத்தில் நீதிமன்றம் மற்றும் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியிடம் தொலைத்தொடர்புத் துறை சமர்ப்பித்த ஆவணங்களைப் பெற்று அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) தலைவர் பி.சி.சாக்கோவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

2ஜி ஊழல் விவகாரம் குறித்து ஜே.பி.சி. தயாரித்த வரைவு அறிக்கை கடந்த ஏப்ரலில் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அந்த வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வரும் திங்கள்கிழமை ஜே.பி.சி. குழு கூடுகிறது.

பிரதமரும் நிதியமைச்சரும் குற்றமற்றவர்கள் என்றும், அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவே அனைத்துக்கும் பொறுப்பு என்றும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதைத் தாமதப்படுத்தும் வகையில் திமுக இப்போது ஒரு புதிய பிரச்சினையை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

“2ஜி விவகாரத்தில் முக்கியமான ஆவணங்களை ஆய்வு செய்யாமலேயே ஜேபிசி வரைவு அறிக்கை தயாரித்துள்ளது. எனவே, மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில் நீதிமன்றம், மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்று அவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த ஆவணங்களைத் தயாரித்த உயரதிகாரிகளை ஜே.பி.சி. முன்பு ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும். தொலைத்தொடர்புத் துறை, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி இடையே நடைபெற்ற தகவல் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று ஜேபிசி தலைவர் பி.சி. சாக்கோவுக்கு, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு கடிதம் எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in