

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் ரயில் பெட்டியில் குண்டு வெடித்ததில் பலியான ஆந்திர மாநில இளம் பெண் சுவாதியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ள தாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிமி இயக்க இளைஞர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப் பட்டதையடுத்து, இவ்வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
பெங்களூருவில் இருந்து சென்னை வழியாக அசாம் மாநில தலைநகர் குவஹாட்டிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2014 மே 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.
இந்த ரயில் அதிகாலை 5.45 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைய வேண்டும். ஆனால், சம்பவம் நடந்த அன்று காலதாமதமாக காலை 7.25 மணிக்கு வந்தது. அப்போது எஸ்-4 மற்றும் எஸ்-7 பெட்டிகளில் திடீரென்று குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி (24) என்ற மென்பொறியாளர் பலியானார். 14 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தமிழக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றக் கோரியும், பலியான சுவாதியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் எம்.துரைச் செல்வன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார். சிபிசிஐடி சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்டிஎஸ்.மூர்த்தி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சிமி இயக்கத்தைச் சேர்ந்த அஜாஜுதீன், ஜாஹீர் ஹுசைன், மெகபூப் ஆகியோரை வெளி மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். இதில், அஜாஜுதீன் கடந்த 2015-ல் தெலங்கானாவில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற இருவரும், கடந்த 2016 பிப்ரவரி 17-ம் தேதி ஒடிஸா மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தந்த வாக்குமூலத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்தைக் கூறியுள்ள னர். தற்போது அவர்கள் மத்தியப் பிரதேச சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களை இந்த வழக்கில் வாரண்ட் பிறப்பித்து ஆஜர்படுத்த உள்ளோம். மேலும் இந்த சம்பவத்தில் பலியான ஆந்திர இளம் பெண் சுவாதியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.