

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்துக்கு ஆதரவு கோரி முதல்வர் ஜெயலலிதாவை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசுகிறார்.
ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கக்கூடாது என்று வலியுறுத்தி, ஆந்திராவைச் சேர்ந்த பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியும், ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி வருகிறார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அவர் ஏற்கெனவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரை சந்தித்தார். இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை ஜெகன்மோகன் ரெட்டி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, ஆந்திர மாநில பிரிப்பு விவகாரத்துடன், வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 3-வது அணி அமைப்பது பற்றியும் அவர் விவாதிப்பார் என்று தெரிகிறது.
ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை ஜெகன்மோகன் ரெட்டி புதன்கிழமை சந்தித்துப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது