

குற்றாலத்தில் சாரல் களைகட்டியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் தாராளமாக விழுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் சாரல் தொடங்கியதால், கடந்த 1-ம் தேதி முதல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த வாரம் 3 நாட்கள் வெயில் வாட்டியதால் தண்ணீர் வரத்து குறைந்தது.
அதன் பிறகு சாரல் மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. கடந்த 3 நாட்களாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் தாராளமாக விழுகிறது. நேற்று பகலில் லேசான வெயில் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது.
குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து தாராளமாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சுமாராக இருந்தது.
பேருந்து வசதி இல்லை
வழக்கமாக குற்றாலத்தில் சாரல் காலம் தொடங்கியதும் தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் இருந்து ஐந்தருவிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சாரல் காலம் தொடங்கி 2 வாரங்கள் ஆகியும் ஐந்தருவிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை என, ஐந்தருவியில் உள்ள வியாபாரி களும், சுற்றுலாப் பயணிகளும் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “வருகிற 20-ம் தேதி முதல் ஐந்தருவிக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படும்” என்றனர்.
குற்றாலம் ஐந்தருவியில் ஆண்கள் பகுதியில் கொட்டிய தண்ணீரில் குதூகலமிடும் இளைஞர்கள்.