

சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் 8 பேர் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம், கோத்தி இன்ஸ்டிடியூட், சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து ‘சாதனை சிறகுகள்’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் 6, 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி, அதில் வெற்றி பெற்ற 8 பேர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டி களில் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் மாநகராட்சியின் கொருக்குப்பேட்டை உயர்நிலைப் பள்ளி மாணவி இலக்கியா, ஆர்.ஏ.புரம் உயர் நிலைப் பள்ளி மாணவன் புஷ்பராஜ், மாணவி ஹரிபிரியா, ஷெனாய்நகர் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் மதன்குமார், பார்த்திபன், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சிவகாமி, குக்ஸ் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷாந்தி, கோடம்பாக்கம் உயர்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் கோடை விடுமுறையில் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இத்திட் டம் மூலம், போட்டியை எதிர்கொள்ளும் திறனும், திறன் வளர்ப்பில் ஆர்வமும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இளம் வயதிலேயே ஏற்பட வாய்ப்பு கிடைக்கிறது. இவர்கள் வெளிநாடு சென்று, அங்குள்ள வளர்ச்சியைப் பார்க் கும் வாய்ப்பும் கிடைக்கிறது’’ என்றனர்.