

மணல் கொள்ளை விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காஞ்சிபுரம் ஆட்சியருக்கு பதிலாக புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, மேலும் 5 ஆட்சியர்கள் ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் ஆட்சியர் எம்.கருணாகரன், திருநெல்வேலி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், கோயம்புத்தூருக்கும், வேலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பி.சங்கர், நீலகிரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆர். நந்தகோபால், வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குனர் டாக்டர் என்.சுப்பையா, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்களுக்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சித்திரசேனன், மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக, அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.