

திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அலமாதி - 1 கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கின் சுற்றுச் சுவர் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இன்று (6.7.2014) அதிகாலை சுவரினை ஒட்டி அமைந்திருந்த குடிசை வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், அந்தக் குடிசைகளில் தங்கியிருந்த 10 கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இது பற்றி இன்று காலை அந்த கிராமத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட நிருவாகத்தால் உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் துயரம் சம்பவம் குறித்து எனக்கு தகவல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் பால்வளத் துறை அமைச்சர் ஏ.மூர்த்தி மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் ஆகியோருக்கு நான் ஆணையிட்டுள்ளேன்.
மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், அவசர மீட்பு ஊர்திகளுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள், தேவையான மருத்துவ அலுவலர்கள் ஆகியோரை உடடினயாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நாகராஜ் என்பவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் ஆணையிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அரசு செலவில் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் நான் ஆணையிட்டுள்ளேன். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.