

நீட் தேர்வை தடுக்காமல் இருந்துவிட்டு சட்டமன்றத்தில் அதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசுக்கு வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சிதலைவர் வேல்முருகன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழர்கள் மருத்துவம் படிப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன் “நீட்” எனும் நுழைவுத் தேர்வை மத்திய மோடி அரசு நுழைத்தது.
அதனை தமிழக மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர். எதிர்க்கட்சிகளும் எதிர்க்கவே, நீட்டை விலக்கும் மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதைச் சுட்டிக்காட்டி, “நீட்டை” ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்களை நம்பவைத்தார்கள் தமிழக அமைச்சர்கள், ஆனால் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட அந்த மசோதாவை மத்திய அரசு அவர் பார்வைக்கே அனுப்பவில்லை.
எங்காவது மூலையில் தூக்கிப் போட்டதா இல்லை குப்பைத்தொட்டியில்தான் வீசியதா தெரியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான டி.ராஜா குடியரசுத்தலைவர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள, அந்த மசோதா அங்கு செல்லவேயில்லை என்பது அப்போதுதான் தெரியவந்தது.
இதற்குப் பிறகும் “நீட்”டை தமிழக அரசு அனுமதிக்காது என்றே சொல்லிவந்தனர் அமைச்சர்கள்.
ஆனால் கடைசியில் நீட் தேர்வு நடந்தது. தமிழக மாணவர்கள் அநீதிக்கும் அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டனர்.
இதைக் கண்டும் காணாதது போல் இருந்தது தமிழக அரசு. மாணவர்களுக்காக ஒரு வார்த்தைகூட அதன் வாயில் இருந்து வெளிவரவில்லை.
இப்போது சட்டமன்றத்தில் “அந்த மசோதாவை மத்திய அரசுதான் குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் இருந்துவிட்டது” என்று கூசாமல் சர்வசாதாரணமாகப் பதிலளிக்கிறார் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
சட்டமன்றத்தில் ”நீட்”டுக்கு எதிரான ஒருமனதான தீர்மானம் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒருமித்த உணர்வு. ஆனால் அந்த உணர்வை அதே சட்டமன்றத்தில் காலில் போட்டு மிதித்து நசுக்கிவிட்டது தமிழக அரசு!
“நீட்” விடயத்தில் தமிழகத்திற்கு மோசம் செய்த தமிழக அரசு, பாலாற்றில் தடுப்பனை கட்டி ஆந்திர அரசு மோசம் செய்வதையும் கண்டுகொள்ளவில்லை.
ஆந்திராவில் 33 கிலோமீட்டர் தொலைவே ஓடும் பாலாற்றில் 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது ஆந்திர அரசு. இப்போது கட்டும் தடுப்பணையால் தமிழகத்திற்கு நீர் வரத்தே நின்றுபோய்விடும். அதனால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் குன்றி, குடிநீருக்கும் திண்டாட்டம் வரும் என்பதுதான் மக்களின் வேதனை.
இதனை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்தியது. எதிர்க்கட்சிகள் மற்றும் எல்லையோர தமிழக மக்கள் கரடியாய்க் கத்தினார்கள். போராட்டங்கள் நடத்தினார்கள். இதெல்லாம் தமிழக அரசின் காதிலும் விழவில்லை. கண்ணிலும் படவில்லை.
சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. இங்காவது பாலாற்றுப் பிரச்சனை பேசப்படுமா? கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? எதிர் நடவடிக்கைக்குத் திட்டமிடப்படுமா?
“நீட்”டைத் தடுக்காமல் அனுமதித்துவிட்டு கூசாமல் அதை அவையிலும் அறிவித்தது போல், பாலாற்றில் தடுப்பணை கட்டுவதைக் கண்டுகொள்ளாமல் கள்ள மவுனம் சாதிப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" இவ்வாறு அவர் தெரிவித்தார்.