

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே திருச்செந்தூரில் பக்தர்கள் பாத யாத்திரையாக குவியத் தொடங்கினர். நேற்று அவர்கள் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
இதுபோல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், முக்கிய நிகழ்வாக முனி குமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் வைபவம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவலம் வந்து திருக்கோயில் சேர்வதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளைக் கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண் டன், இணை ஆணையர் தா.வரதராஜன் ஆகியோர் செய்துள் ளனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந் தது.