

அயனாவரம் அரசு ஊழியர் வாடகை குடியிருப்பில் வெளியாட்களின் நடமாட்டத்தால் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்பின்றி அச்சத்தில் வாழ்கிறோம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நிம்மதி இழந்து தவிப்பதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை அயனாவரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான அரசு ஊழியர் வாடகை குடியிருப்பு உள்ளது. இங்கு உள்ள 256 வீடுகளில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.
இங்கு சென்னை தலைமைச் செயலகம், வேளாண்மைத் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர்.
வெளியாட்களின் நடமாட்டம்
வெளியாட்களின் நடமாட்டத்தாலும், சுகாதார சீர்கேட்டாலும் இங்குள்ளவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும் குப்பை. இந்த குடியிருப்பை ஒட்டியுள்ள திருவள்ளுவர் நகர் மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகள், கட்டிட இடிபாடுகளை இந்த குடியிருப்புக்குள் கொண்டு வந்து கொட்டுகின்றனர். குடியிருப்பின் இருபுறமும் 150 மீட்டர் நீளத்துக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருப்பதால் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அரசு அலுவலர் முன்னேற்ற கழக மாநில அமைப்புச் செயலாளரும், அயனாவரம் தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்போர் பொதுநல சங்கச் செயலாளருமான ஆர்.சவுந்தர்ராஜன் கூறியதாவது:
இடிந்து விழும் அபாயம்
இந்த குடியிருப்புகள் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால், பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. திருவள்ளுவர் நகர் மக்கள் இந்த குடியிருப்புக்குள் குப்பைகளையும், கட்டிட இடிபாடுகளையும் கொண்டு வந்து கொட்டுவதால் குடியிருப்பு குப்பை மேடாக மாறி வருகிறது.
குப்பையில் இருந்து நாற்றம் அடிப்பதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தரைமட்டத் தண்ணீர் தொட்டியைக் கழுவி பல ஆண்டுகள் ஆவதால், புழுப்பூச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன.
சமூக விரோதிகளின் அட்டூழியம்
வீட்டு வாடகை, வரி உள்ளிட்ட அனைத்தையும் கட்டுகிறோம். ஆனால், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வீட்டு வசதி வாரியம் மறுக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் நகரை ஒட்டியுள்ள சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. அடுத்த ஆண்டு மனநல காப்பகத்தையொட்டியுள்ள சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இப்போது குடியிருப்புக்குள் யார், யாரோ வந்து போகிறார்கள். சமூக விரோதிகளின் அட்டூழியமும் அதிகரித்துவிட்டது. இதனால் 20 ஆண்டுகளாக அச்சத்தில் வாழ்கிறோம்.
இதுபற்றி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரிகளிடம் பல தடவை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்போது முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.
குப்பையை அகற்ற ஏற்பாடு
இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரி கூறுகையில், "லாரியை அனுப்பி குப்பையை அள்ளும்படி சென்னை மாநகராட்சியிடம் கேட்டுள்ளோம். நாங்கள் எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் மாடிகளில் குடியிருப்பவர்கள் பொறுப்பில்லாமல் குப்பைகளை கீழே வீசுகின்றனர். சுற்றுச்சுவரில் இடிந்துவிழுந்த பகுதியை கட்டிக் கொடுப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கு வெளியாட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை " என்றார்.