

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இணையத்தில் பலரும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், ஒய்.ஜி.மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் புகார் கொடுத்துள்ளார்.
ஒய்.ஜி.மகேந்திரனின் ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு நிலைத்தகவலில் "கொலை செய்யப்பட்ட சுவாதி ஒரு பிராமணப் பெண் என்பதால் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. இதுவே அவர் ஒரு தலித்தாக இருந்திருந்தால் தலித் இயக்கங்கள், திராவிடக் கட்சிகள், ஊடகங்கள், மாதர் சங்கம் என அனைத்து தரப்பும் அவருக்காக குரல் கொடுத்திருக்கும்" என்று பொருள்படும்படி மிகக் கடுமையான வார்த்தைகளில் கருத்து பதியப்பட்டிருந்தது. குற்றவாளியின் பெயர் பிலால் மாலிக் எனவும் அந்த நிலைத்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தான் இந்த தகவலை சுயமாக பதிவிடவில்லை என்றும், தனக்கு வந்த தகவலை பகிர மட்டுமே செய்ததாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஒய்.ஜி. மகேந்திரன் கூறியுள்ளார்.
விளக்கமளித்தும் மன்னிப்புக் கோரியும் ஒய்.ஜி. மகேந்திரன் பதிந்த கருத்துகள்:
1. அனைவரும் உணர்ச்சிவசப்படுவதற்கு முன்னதாக நான் ஒரு விளக்கமளிக்க விரும்புகிறேன். அந்த கருத்தை நான் ஃபார்வர்டு மட்டுமே செய்தேன். சுவாதி கொலை வழக்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றே நான் நினைத்தேன். எனது கவலையெல்லாம் சுவாதியைப் பற்றி மட்டும்தான். நான் பகிர்ந்த பதிவில் ஏற்கெனவே கொலையாளியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பதற்றத்தில் நான் அந்தப் பதிவை அவசரப்பட்டு பகிர்ந்துவிட்டேன். சுவாதி கொலை சம்பவம் நிறைய பேரை பாதித்திருக்கிறது. யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என நான் நினைக்கவில்லை. நாம் மதவாதி அல்ல. எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் குற்றவாளி கண்டனத்துக்குரிய நபரே. நான் யாரையாவது வேதனைப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அந்த நிலைத்தகவல் நான் எழுதியது அல்ல.
2. என்னைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சையை சீர் செய்ய விரும்புகிறேன். சுவாதி கொலை வழக்கிற்கு மற்ற வழக்குகள்போல் கவனம் அளிக்கப்படவில்லை என்று கருதியதாலேயே சுவாதி தொடர்பான அந்த கருத்தை பகிர்ந்தேன். அந்த கருத்தை நான் சுயமாக எழுதவில்லை. எனது கணினியில் தமிழ் எழுத்துருகூட இல்லை. அதிலிருந்த சுவாதிக்காக யாரும் குரல் கொடுக்க முன்வரவில்லை என்ற கருத்துடன் மட்டுமே என் மனம் ஒத்துப்போனதால் அக்கருத்தை பகிர்ந்திருந்தேன். அந்த கருத்தை நானே தெரிவித்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எனக்கு மனத் தைரியம் இருந்திருக்கும். இதற்கு முன்னால் எனது கருத்துகளுக்காக நான் உறுதியாக குரல் கொடுத்த தருணங்கள் உண்டு. இதை நம்புவதா வேண்டாமா என்பது வாசகர்கள் வசம். ஆனால், இதுவே உண்மை.
இவ்வாறு இரண்டு நிலைத்தகவலை ஒய்.ஜி.மகேந்திரன் பகிர்ந்துள்ளார். எனினும், அவர் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார்.