

பேரறிவாளன் விசாரணையில் தவறான வாக்குமூலம் தாக்கல் செய்ததாக கூறிய தியாகராஜன் எஸ்.பி.யை விசாரிக்க வேண்டும் என சிபிஐ இயக்குநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜாராம் ஆகியோர் திங்கள்கிழமை சிபிஐ இயக்குநரிடம் அளித்தனர்.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கூறியது: 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ சார்பில் விசாரித்தவர் எஸ்.பி.யான தியாகராஜன். அவர், “பேட்டரிகள் எதற்காக வாங்கப்பட்டன என்பது பற்றித் தெரியாது” என பேரறிவாளன் அளித்த வாக்கு மூலத்தை தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்த அவரது பேட்டி பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. இதன்மூலம், பேரறிவாளன் கூறியதாக தியாகராஜன் தாக்கல் செய்த பொய்யான அறிக்கையால் அவருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
எனவே, தியாகராஜனை சிபிஐ அழைத்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்' என்று கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
எனவே, பேரறிவாளனின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் எனவும், பேரறிவாளன் விடுதலையாகவும் வாய்ப்புள்ளது என்றும் கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.
அவரது மனுவை பெற்றுக்கொண்ட சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் தாக்கல் செய்த கோப்புகளை ஆய்வு செய்துவிட்டு ஆவன செய்வதாக உறுதி அளித்ததாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
பேரறிவாளனின் கருணை மனுவை பரிசீலனை செய்வதற்கு ஆன காலதாமதத்தை காரணமாக வைத்து அவரது தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தியாகராஜனின் பேட்டி பற்றி உச்ச நீதிமன்றத்தில், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜாராம் ஒரு பொது நல மனுவை விரைவில் தாக்கல் செய்யவுள்ளனர்.