

முதல்வர் ஓபிஎஸ் பேட்டியளித்தபோது, மக்கள் ஆதரவு பெற்ற ஒருவர்தான் முதல்வராக வர வேண்டும். கட்சித் தொண்டர்கள் ஏற்கும் நபர்தான் பொதுச் செயலாளராக வரவேண்டும் என தெரிவித்தார். அப்போது நீங்கள்தான் முதல்வர் என அங்கிருந்த தொண்டர்கள் குரல் எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் வரவேண்டும் என்றில்லை. மக்கள் ஏற்கும் நபர் முதல்வராக வரவேண்டும் என்றார். அப்போது ஓபிஎஸ் வாழ்க என்ற கோஷம் எழுந்தது.
அதிரடியாக பேட்டியளித்த ஓபிஎஸ்-க்கு மெரினாவுக்கே வந்து வாழ்த்து தெரி வித்தார் முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி. பேட்டி முடிந்த பிறகு இரவு 10.21 மணிக்கு தொண்டர்கள் புடைசூழ தனது வீட்டுக்கு சென்றார் ஓபிஎஸ். அப்போது வழிநெடுகிலும் ஓபிஎஸூக்கு ஆதரவு கோஷம் எழுந்தது. அவரது வீட்டிலும் ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர். வீட்டில் குழுமியிருந்தவர்களைப் பார்த்து கண்ணீர் மல்க கும்பிட்டு நன்றி தெரிவித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் ராஜினாமாவை வாபஸ் வாங்குங்கள் என்றனர். அதற்கு சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார். இதனால் கிரீன் வேஸ் ரோடு நள்ளிரவிலும் பரபரப்பானது.