Last Updated : 05 Oct, 2014 01:31 PM

 

Published : 05 Oct 2014 01:31 PM
Last Updated : 05 Oct 2014 01:31 PM

பாதாளம் வரை பாயும் பண வெறி.. பதற வைக்கும் செம்மண் கொள்ளை: அரசுக்கு ரூ.1,500 கோடி வருவாய் இழப்பு என புகார்

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடக்கும் செம்மண் கொள்ளையை சகாயம் குழு விசாரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கனிம மணல் பற்றிய மர்மங்களை கண்டறிவதற்காக அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்கு நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில்... ‘‘சகாயம் ஐயா.. இந்த செம்மண் கொள்ளை பற்றியும் கட்டாயம் நீங்கள் கண் திறந்து பார்க்கணும், ஐயா!’’ என்று கதறத் தொடங்கி இருக்கிறார்கள் சோழ மண்டல விவசாயிகள். தொடர்ந்து பல வருடங்களாக புகார்கள் பல அளித்து சோர்ந்து போன இவர்கள், சகாயம் மீது புது நம்பிக்கை வைத்து மறுபடியும் போர்க்குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர்.

வானம் பார்த்த பூமி

வல்லம் காவல் நிலையத்துக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கும் இடையே, நேர் பின்புறம் சுமார் 20 கி.மீ. சுற்றளவில் வல்லம், திருக்கானூர்பட்டி, அற்புதாபுரம், மஞ்சப்பேட்டை, ஆனை நகர், சென்னம்பட்டி, நாட்டாணி, வல்லம்புதூர், தச்சன்குறிச்சி, கல்லுப்பட்டி, முன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, செல்லப்பன் பேட்டை, செங்கிப்பட்டி, ஆச்சம்பேட்டை, மலையப்பட்டி கிராமங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் இயற்கைப் பேரழிவை மாவட்ட நிர்வாகமும், புவியியல் மற்றும் சுரங்கத் துறையும் கடந்த 20 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.

விவசாயி சிவ.கார்த்திகேயன் வயலையொட்டி சுமார் 50 அடி ஆழத்துக்கு மேல் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ள குவாரி.

இதில் பாதி கிராமங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன. இது, வானம் பார்த்த பூமியானாலும் வளமான விவசாயப் பகுதி. இங்கு சுமார் 10,000 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. கரும்பு, துவரை, வாழை, மக்காச்சோளம் அதிகம் விளைகிறது. பழப் பண்ணைகள் நிறைய உள்ளன. பருவ மழை, காட்டாறு, ஏரி, குளம் மற்றும் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்கின்றனர். புறம்போக்கு நிலங்களும் நிறைய உள்ளன.

பள்ளத்தாக்கான தலைநகரம்

வல்லம்தான் தஞ்சைக்கு முன்பாக சோழர்களின் தலைநகராக இருந்தது. அப்போது அமைத்த கோட்டை அகழியின் பெரும் பகுதி தற்போதும் உள்ளது. மாவட்டத்திலேயே மேடான பகுதி என்பதால் அக்கால மன்னர்கள் இங்கு தலைநகரை அமைத் துள்ளனர். ஆனால், இப்போது இது படுபாதாள நிலப்பகுதியாக மாறிவருகிறது. இங்கு சில மலைகளும் உள்ளன. அவையும் இப்போது அழிக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போன ரெட்டை மலை

“இது வானம்பாத்த பூமிதான். கொஞ்சம் தண்ணி இருந்தா போதும்... எதப்போட்டாலும் மொளைக்கும். அத்தனையும் ருசியா இருக்கும். இந்த மண்ணோட வாகு அப்படி. இங்க வெளையற துவரை பயறு இந்தியா முழுக்க பிரபலம். இந்த செம்மண்ண கொழச்சி நாங்க செய்யிற பக்குவம்தான் காரணம். ஆனா, இப்ப எங்க வயலுங்க எல்லாம் அந்தரத்துல தொங்குது. எப்ப நிலச்சரிவு ஏற்படும்னு தெரியாது. எங்கப் பாத்தாலும் பாதாளமா வெட்டி வச்சிருக்காங்க. கேட்டா தாக்குறாங்க. வண்டிப் பாதையக் கூட விட்டு வைக்கல. இங்க ரெட்ட மலைன்னு ஒன்னு இருந்துச்சி. இப்ப அத காணோம். எல்லாத்தையும் சுரண்டிட்டாங்க” என்கிறார் விவசாயி கே.குணசேகரன்.

செம்மண் குவாரியில் இறங்கிப் போராடும் விவசாயிகள்.

“அருகில் உள்ள ஆலக்குடி கிராமத்தில் ஒரே சர்வே எண் கொண்ட தனது வயலில் இருந்து மண்ணை வெட்டி பக்கத்து வயலில் கொட்டிய விவசாயியின் டிராக்டரை பறிமுதல் செய்த சுரங்கத் துறை, அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக மணல் அள்ளும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்யும் சுரங்கத் துறை, வல்லத்தைச் சுற்றி சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படும் செம்மண் நாளொன்றுக்கு சுமார் 250 லாரிகளில் சுற்றிலும் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுக்க தடையில்லாமல் கொண்டு செல்லப்படுவதை ஏன் தடுக்கவில்லை” என்கிறார் இளம் விவசாயி வெங்கடேசன்.

எந்த நடவடிக்கையும் இல்லை

“வல்லத்தையொட்டி திருக்கானூர்பட்டில என்னோட வயல் இருக்கு. எப்ப சரிஞ்சி விழும்னு தெரியல. சுத்திலும் பாதாளம் மாதிரி செம்மண்ணை வெட்டிட்டாங்க. போதாக்குறைக்கு என்னோட வயலையும் கேட்டு மிரட்டுறாங்க. இங்க உள்ள புறம்போக்கு நிலத்தை எல்லாம் ஆக்கிரமிச்சி அழிச்சிக்கிட்டு இருக்காங்க. வயலுக்கு கரன்ட் வர்ற கம்பம் கூட அந்தரத்துல நிக்குது. குளம், குட்டையக் கூட விட்டுவைக்கல. இதப் பத்தி 2005-ல இருந்து கலெக்டருங்க கிட்ட மனு கொடுத்துட்டு வர்றேன். கடந்த ரெண்டு மாசமாவும் தொடர்ந்து மனு கொடுத்துருக்கோம். ஆனா, எந்த நடவடிக்கையும் இல்ல” என்கிறார் விவசாயி கே.ராஜாங்கம்.

“சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்பு சாகுபடி செய்யிறேன். என் வயலுக்குள்ள டிப்பர் லாரிய ஓட்டி சொட்டுநீர் குழாய்களை உடைச்சிட்டாங்க. அதப்பத்தி கேட்ட என்னோட தம்பி மகேஸ்வரனை இரும்பு பைப்பால் அடிச்சி கை, காலை உடைச்சிட்டாங்க. போலீஸ்ல புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்ல” என்கிறார் விவசாயி சிவ.கார்த்திகேயன்.

அரசுக்கு ரூ.1,500 கோடி இழப்பு

அரசின் விதிப்படி அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே, பக்கத்து நிலங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் போதிய இடைவெளி விட்டு மண் அள்ள வேண்டும். 3 மீட்டர் ஆழத்துக்கு மேல் வெட்டக்கூடாது. அதன்படி, ஒரு ஏக்கர் நிலத்துக்கு மொத்தம் 1,000 பர்மிட் (லாரி நடை) மட்டுமே அரசு அனுமதித்துள்ளது.

ஒரு நாளைக்கு சராசரியாக 200 லாரி நடை என்றால் இந்த 1,000 பர்மிட்கள் 5 நாட்களில் தீர்ந்துவிடும். ஆனால், கண்காணிக்க ஆள் இல்லாததால், இதே பர்மிட்டுகளை ஆண்டுக் கணக்கில் வைத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட 10 அடிக்குப் பதிலாக 50, 100, 150 அடி ஆழம் வரை வெட்டி ஒரே இடத்தில் 40,000 லாரிகளுக்கு மேல் மண்ணை அள்ளி விற்கின்றனர். அதாவது அந்த ஒரு சில ஏக்கர் அனுமதியிலேயே அக்கம் பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை வளைத்தும், தனியார் நிலங்களைச் சுற்றிலும் வெட்டி அச்சுறுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்கியும் சுமார் 30- 40 ஏக்கர் வரை மண்ணை வெட்டி அள்ளுகின்றனர்.

விவசாயிகளின் கணக்குப்படி, கடந்த 10 ஆண்டுகளில் அள்ளப்பட்ட மண்ணுக்கு முறையான பர்மிட் போட்டிருந்தால் அரசுக்கு ரூ.1,500 கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும். அனுமதி இல்லாத இடத்தில் மண்ணை வெட்டி விற்பதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட பல ஆயிரம் கோடி இழப்பும், விவசாயிகளுக்கும், இயற்கைக்கும், பொதுச் சொத்துகளுக்கும் ஏற்பட்ட இழப்பும் தனி.

அடியில் உள்ள வெள்ளை மண் (சுண்ணாம்பு பாறை) வரை தோண்டி, அதன் மேல் லாரிகள், இயந்திரங்கள் செல்வதால் நீர் உறிஞ்சு துளைகள் அனைத்தும் அடைபட்டு கான்கிரீட் தளம் போல் ஆகிவிடுவதால், மழை நீர் பூமிக்குள் இறங்காமல் நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழ் சென்றுவிட்டதாகவும், வயலுக்கு கிடைக்கும் மழை நீரும், பாய்ச்சும் நிலத்தடி நீரும் சுற்றிலும் வெட்டப்பட்ட குவாரிகளில் கசிந்து ஆவியாகி விடுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் அண்மையில் நடத்திய போராட்டத்துக்குப் பின்னர் உடனடியாக அகற்றப்பட்ட தகவல் பலகை. காலாவதியான உரிம ஆண்டு, தவறான சர்வே எண், பரப்பளவு குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்.துரை சாம்ராஜ்யம்

இத்தனைக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் வல்லத்தைச் சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் சிங்.துரை என்று குற்றம் சாட்டுகிறார்கள் விவசாயிகள். “1988-ல் ஒரு வாடகை ஜெசிபி இயந்திரத்தைக் கொண்டு மண்ணை வெட்டத் தொடங்கிய இவர், 1995-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக புறம்போக்கு நிலங்களை வெட்டி ‘உலகத் தமிழ் மாநாடு- அவசரம்’ என்று லாரிகளில் ஸ்டிக்கர் ஒட்டி மண் சப்ளை செய்யத் தொடங்கியுள்ளார்.

அப்போதைய ‘அவரசத்தில்’ இவரை அரசு கண்டுகொள்ளாத தால், அதையே சாதகமாக்கிக் கொண்டு சட்டவிரோத குவாரி சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியுள்ளார். 2005-ல் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தின்போது அது இன்னும் பெரிய அளவில் விரிவடைந்தது. சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான அந்தச் சாலைக்கு நாகை சாலை முதல் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வரை இவர்தான் மண் சப்ளை செய்துள்ளார். இதன் பின்னர் மேலும் நவீன இயந்திரங்களை வாங்கி இப்பகுதி முழுவதும் தோண்டி வருகிறார். இவரது அபார வளர்ச்சியைப் பார்த்து வல்லம், மாப்பிள்ளைநாயக்கன்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இன்னும் பலரும் இப்போது இத் தொழிலில் நுழைந்து இப்பகுதியையே பேரழிவுக்குள்ளாக்கி வருகின்றனர்” என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

பெரிதாக ஒன்றும் இல்லை

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் சி.சம்பத் மற்றும் புவியியலாளர் பி.மாரியம்மாளிடம் கேட்டபோது, “சிங்.துரை என்பவருக்கு சர்வே எண்.115-ல் 1.27 ஹெக்டேர் (சுமார் 3.5 ஏக்கர்) நிலத்தில் மட்டும் 2013 முதல் 2015 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி 3 மீட்டர் ஆழம்தான் வெட்டவேண்டும். நாங்கள் நேரில் ஆய்வு செய்தபோது கொஞ்சம் அதிகமாக(!) வெட்டியுள்ளது தெரிகிறது. விவசாயிகள் சொல்வதுபோல பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. கடந்த வாரம் கூட 3 லாரிகளைப் பிடித்து அபராதம் விதித்துள்ளோம். மண் வெட்டுவதை தற்காலிகமாக நிறுத்தச் சொல்லியுள்ளோம். குவாரி உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம், உரிமத்தை ரத்து செய்வது பற்றி மாவட்ட ஆட்சியர்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றனர்.

ஜாதி ரீதியான பகைமை?

இதுகுறித்து சிங். துரையிடம் பேச அணுகியபோது, அவரது மகன் பிரவீன்ராஜ் அளித்த பதில்: எங்கள் குடும்பத்துக்கு இங்கு 5 மண் குவாரிகள் உள்ளன. முறைப்படிதான் மண் வெட்டுகிறோம். இப்போது சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக உள்ளதால் ஒரு இஞ்ச் மண் கூட நாங்கள் அதிகம் வெட்டுவதில்லை. 20 வருஷமாக நாங்கள் இங்கு மண் வெட்டி வருகிறோம். அப்போது எல்லாம் புகார் தராமல் இப்போது அளிக்கக் காரணம் என்ன என்று யோசித்துப் பாருங்கள்... அவர்கள் எல்லாம் திமுக, நாங்கள் அதிமுக! இதில் ஜாதி ரீதியான பகைமை வேறு இருக்கிறது. அதனால்தான் எங்கள் மீது வேண்டும் என்றே புகார் செய்கின்றனர். ஆர்.டி.ஓ. எஸ்.தேவதாஸ் போஸ்,

ஏ.டி. மைன்ஸ் சி.சம்பத் எல்லாம் நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்து, சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டனர். அதனால், கலெக்டரும் எங்களுக்கு மீண்டும் குவாரி நடத்த அனுமதி அளித்து உள்ளார்.” என்றார்.

ஆய்வு செய்யாமல் அனுமதி

“சிங்.துரை குடும்பத்தை மட்டுமே குறி வைத்து நாங்கள் புகார் சொல்லவில்லை. சட்ட விரோதமாக இயற்கையை சூறையாடும் எல்லோர் மீதும்தான் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். இங்கு முறைகேடு நடந்துள்ளதா இல்லையா என்பதை நேரில் ஆய்வு செய்யாமலே கலெக்டர் குவாரிக்கு மீண்டும் அனுமதி அளித்துள்ளார். அதனால்தான் நாங்கள் சகாயம் குழு நேரில் ஆய்வு செய்து உண்மையை அறிவிக்க வேண்டும் என்று கேட்கிறோம். இந்த முறைகேடு குறித்து நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்கின்றனர் விவசாயிகள்.

அறிக்கை தர உத்தரவு

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையனிடம் கேட்டபோது, “விவசாயிகள் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகைப்படங்களை பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் உள்ளது. அதிக ஆழம் வெட்டியுள்ளது தெரியவருகிறது. இதுகுறித்து வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் சுரங்கத் துறை இணைந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி தெரிவித்துள்ளேன். அடுத்த வாரத்தில் இப்பணி தொடங்கும். விதிமீறல் தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

எழுதப்படாத உடன்பாடுகள்?

“சுரங்கத் துறையினர் இந்த குவாரிகளை ஆய்வு செய்வதே இல்லை. பிடிபட்ட 3 லாரிகளும் கூட நாங்கள் குவாரிக்கு முன்பாக போராடிய மறுநாள் கண் துடைப்புக்காக செய்யப்பட்ட நடவடிக்கையே. அவர்கள் செய்ய வேண்டிய பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் அளந்த வகையில் 50, 100, 150 அடி ஆழம்வரை வெட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அளக்காமலேயே அதிக ஆழத்துக்கு வெட்டவில்லை என்று கூறுவது நகைப்பாக உள்ளது. இவர்களுக்கும் இந்த முறைகேட்டில் பங்கு இருக்கிறது. நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று காட்டுவதற்காக மாதம் 3 லாரிகளுக்கு ஃபைன் போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குவாரி உரிமையாளர்களுக்கும் சுரங்கத் துறைக்கும் இதுபோன்ற எழுதப்படாத பல உடன்பாடுகள் இருப்பதாக நம்புகிறோம்” என்கின்றனர் விவசாயிகள்.

நேரில் சென்று நாம் பார்த்த மற்றும் விசாரித்த தகவல்களும், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளும் இங்கு அப்படியே தரப்பட்டுள்ளன. இனி, இப்பிரச்சினை வாசகர்கள், அரசு, நீதிமன்றத்தின் கைகளில்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x