

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ராம்குமார் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்கிறார் என்று வழக்கறிஞர் எஸ்.பி. ராம்ராஜ் அழுத்தமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் ராம்ராஜ் 'தி இந்து' இணையதள செய்திப் பிரிவிடம் கூறியது:
* ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்ததும், புழல் சிறை காவல் அதிகாரிக்குப் போன் செய்து பேசினேன். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். (அவருடன் பேசிய அந்த ஆடியோ பதிவு இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது)
* ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார். ராம்குமார் சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டார். 2 காவலர்கள் கண்காணிப்பின் கீழ் இருந்தவர் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்?
* சிறையில் மின்சாரம் தாக்கி இறக்கும் அளவுக்கு எந்த வயரும், கம்பியும் இல்லை. சுவரில் இருக்கும் வயர் கூட ஷாக் அடித்தால் வெளியே தூக்கிப் போடும். உள்ளே இழுத்துச் செல்லாது. அப்படி இருக்கையில், வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்வதில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை. அது பொய்.
* கடந்த ஜூலை 1-ம் தேதி டி.மீனாட்சி புரத்தில் தனது வீட்டில் பதுங்கி யிருந்த ராம்குமார் போலீஸார் பிடிக்க முயன்றபோது, ராம்குமார் தனது கழுத்தை பிளேடால் U வடிவில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் கூறினர். இப்போது வயர் கடித்து தற்கொலை செய்ததாக கூறுகின்றனர். சிறையில் கவுன்சிலிங் கொடுத்த பிறகும் தற்கொலைக்கு முயல்வாரா? உண்மையில் ராம்குமார் தற்கொலை மனநிலையில் இல்லாதவர். மனதிடம் அதிகம் உள்ளவர்.
* செய்யாத தவறுக்கு சிறை தண்டனை அனுபவிக்கிறோம் என்ற மனவருத்தம் ராம்குமாருக்கு இருந்தது. 'நான் நிரபராதி என நீங்கள் நிருபித்துவிடுவீர்கள். நிச்சயம் ஜாமீனில் வெளிவே வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்ற மன உந்துதலில் என்னிடம் பேசினார். அப்படி நம்பிக்கையுடன் பேசியவர் எப்படி தற்கொலை முடிவை எடுக்க முடியும்?
* காவிரி பிரச்சினை மையப்படுத்துவதை தவிர்ப்பதற்காகவே ராம்குமார் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கிறோம்.
* தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், காவல்துறை, சிறைத்துறை மட்டுமல்ல, அதற்குப் பின்னால் சுவாதி கொலை வழக்கு விசாரணை மீதும் எங்களுக்கு சந்தேகம் வலுக்கிறது.
* பாதிக்கப்பட்டவர் இறந்துபோனாலும், வழக்கு முடியாது. இந்திய அரசின் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் மீண்டும் மீண்டும் நீதிமன்றம் சென்று போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.