

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் தண்ணீர் நிரப்பவும், தற்காலிக தரைப்பாலம் அமைக்கவும், பக்தர்கள் தண்ணீர் பீச்சியடிக்கவும் சிறப்பு ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர் கோவில் சித்திரைத் திருவிழா மே 6-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாக்களின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர்.
கடந்த காலங்களில் வைகை ஆற்றில் நிரந்தரமாக தண்ணீர் வந்ததால் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதில் எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது.
ஆற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும் வைகை அணையில் இருந்து சித்திரைத் திருவிழாவுக்காக தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. வைகை அணையிலும் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் மதுரையின் குடிநீருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கள்ளழகர் ஆற்றில் இறங்க பொதுப்பணித் துறையினர் ஆற்றில் சிமெண்ட் தொட்டி கட்டி லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி, அதில் பூக்களை தூவி, அந்த தொட்டி வழியாக அழகர் இறங்க மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக தரைப்பாலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆற்றுப் பகுதி முழுவதும் பக்தர்கள் அழகரை பார்க்க திரள்வர். இதனால் அழகர் வரும் வழித்தடத்தில் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆற்றுப் பகுதி முழுவதும் மேடு, பள்ளமாகவும், கற்கள் நிரம்பியும் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் நெரிசலில் சிக்கி கீழே விழுந்து காயமடையாமல் இருக்க மாநகராட்சி, பொதுப்பணித்துறை, இந்து அறநிலையத்துறை மற்றும் போலீஸார் இணைந்து அழகர் ஆற்றில் இறங்கும்பகுதியில் பக்தர்கள் வர வாய்ப்புள்ள குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமாவது கற்கள், மேடு, பள்ளங்களை மேவி ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வைகை அணையில் தண்ணீர் இல்லாததால் இந்த விஷயத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றார்.
மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டபோது, ‘‘அழகர் ஆற் றில் இறங்கும்பகுதியில் தொட்டி கட்டி அதில் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்கிறோம். பக்தர்கள் தண்ணீர் பீச்சியடிக்கவும் தேவையான வசதிகள் செய்யப்படும், என்றார்.